'காந்தாரா 2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு நடிகர் மரணம்


காந்தாரா 2 படப்பிடிப்பில் மீண்டும் ஒரு நடிகர் மரணம்
x

'காந்தாரா 2' படப்பிடிப்புக்காக வந்த நடிகர் விஜூ வி.கே. என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் 'காந்தாரா'. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் 'பஞ்சுருளி' என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான 'காந்தாரா சாப்டர் 1' உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு ஷிவமோகா மற்றும் அகும்பே ஆகிய பகுதிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இதன் படப்பிடிப்புக்காக வந்திருந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த விஜூ வி.கே. (வயது 43), என்ற நடிகர் விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியான 'மார்கோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, காந்தாரா 2 பாகத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞரான கபில் என்பவர் கடந்த மாதம் கேரளாவில், சவுபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து நடிகர் ராகேஷ் புஜாரி திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் போது மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது 3-வது ஆளாக விஜூ வி.கே உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுவதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

1 More update

Next Story