

கவுகாத்தி,
அசாமைச் சேர்ந்த பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்குள்ள கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்தார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், பாடகர் ஜூபின் கார்க் இறப்பு திட்டமிட்ட கொலை தான் என அசாம் மாநில சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, பாடகர் ஜூபின் கார்கின் இறப்பு எதிர்பாராத மரணம் அல்ல, திட்டமிட்ட கொலைதான் என்று அசாம் போலீஸ் உறுதி செய்துள்ளது. அதனால்தான், அவர் இறந்த மூன்று நாட்களுக்குள், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 103-வது பிரிவு சேர்க்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஜூபின் கார்க்கை கொலை செய்துள்ளார். மற்றவர்கள் அவருக்கு உதவியுள்ளனர். டிசம்பரில் வலுவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அப்போது ஜூபின் கார்க் கொலைக்கான பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றார்.