'அட்டகத்தி' தினேஷின் ''தண்டகாரண்யம்'' - சினிமா விமர்சனம்

பழங்குடி மக்களின் வாழ்வியலை சொல்லும் கதை.
சென்னை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 'அட்டகத்தி' தினேஷ் தனது மனைவி ரித்விகா, தம்பி கலையரசனுடன் வசித்து வருகிறார். வனத்துறையில் தற்காலிக காவலராக பணியாற்றி வரும் கலையரசன், தனது உயர் அதிகாரிக்கும், தினேசுக்கும் இடையே ஏற்படும் மோதலால் வேலையிழக்கிறார்.
இதையடுத்து தனது நிலத்தை விற்று நக்சலைட்டுகளை கட்டுப்படுத்துவதற்காக ஜார்கண்டில் மத்திய அரசு உருவாக்கிய சிறப்பு பாதுகாப்பு படையில் கலையரசனை சேர்த்து விடுகிறார் தினேஷ்.
ஒருகட்டத்தில் அந்த இடத்துக்கு வருபவர்கள் உயிரோடு அங்கிருந்து செல்ல முடியாது என்ற உண்மை அவருக்கு தெரியவருகிறது. அப்படி அந்த பயிற்சி மையத்தில் என்னதான் நடக்கிறது? அரசு வேலை என்ற கனவுடன் சென்ற கலையரசனின் கதி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞராக எதார்த்த நடிப்பால் தினேஷ் கவனிக்க வைக்கிறார். அநியாயங்களுக்கு எதிராக அவர் பொங்கி எழும் இடங்களில் சிலிர்ப்பு.
கலையரசின் நடிப்புக்கு கைதட்டலாம். உயிர் போகப்போகிறது என்று தெரிந்து அவர் செய்யும் விஷயங்கள் பதற்றம் தருகிறது. ரித்விகா, சபீர் கல்லரக்கல், பாலசரவணன், ரித்விகா, வின்சு சாம், அருள்தாஸ், முத்துகுமார், யுவன் மயில்சாமி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வு.
அடர்ந்த வனப்பகுதிகளையும், அதையொட்டி வாழும் மக்களின் வாழ்வியலையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜா. ஜஸ்டின் பிரபாகரின் இசை படத்துக்கு அச்சாணி. 'பெரியவர்' பாடல்களை சேர்த்துள்ளீர்களே, 'சாமி' குத்தம் ஆகிடாதா?
திரையுலகில் சொல்லப்படாத கதைக்களம் படத்துக்கு பலம். உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு இன்னும் உயிர் கொடுத்திருக்கலாம். திருப்பங்களை காட்டுகிறோம் என்ற பெயரில் திரைக்கதையின் போக்கை திசைமாற்றி விட்டார்கள். கோர்வையில்லாத காட்சிகள் பலவீனம்.
அதிகார வர்க்கத்தினரின் முகத்திரையை கிழிக்கும் வகையில் சமரசமின்றி தனது களத்தில் கதை சொல்லி கவனிக்க வைத்துள்ளார், அதியன் ஆதிரை.
தண்டகாரண்யம் - இன்னும் பட்டை தீட்டியிருக்கலாம்.






