ஆஸ்கர் அகாடமியில் திரையிடப்படும் மம்முட்டியின் “பிரம்மயுகம்”

ஆஸ்கர் அகாடமியின் அருங்காட்சியகத்தில், பிப்ரவரி12-ம்தேதி மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ படம் திரையிடப்படுகிறது.
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்முட்டி தமிழில், மவுனம் சம்மதம், அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, அரசியல், மறுமலர்ச்சி, ஆனந்தம், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
2024ம் ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ‘பிரம்மயுகம்’ என்கிற திரைப்படம் வெளியானது 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நடக்கும் விதமான கதை அம்சத்துடன் ஒரு ஹாரர் திரில்லர் படமாக கருப்பு வெள்ளையில் இது உருவாகி இருந்தது. இந்த படத்தில் மம்முட்டி 80 வயதான ஒரு மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ராகுல் சதாசிவன் இயக்கி இருந்தார்.
பிரம்மயுகம் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதை மம்முட்டி சமீபத்தில் பெற்றார். இங்கிலாந்தில் உள்ள ஒரு கலை பண்பாட்டுக் பல்கலைகழகம் ஒன்றில் திரைப்பட பயிற்சி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு 'பிரம்மயுகம்' படம் ஒரு பாடமாக திரையிட்டு காட்டப்படுகிறது.
இந்நிலையில் ‘பிரம்மயுகம்’ படம் ஆஸ்கர் அகாடமியில் திரையிடப்பட இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஸ்கர் அகாடமியின் அருங்காட்சியகத்தில், அடுத்த ஆண்டு பிப்ரவரி12-ம்தேதி திரையிடப்படும். இதில் பங்கேற்கும் ஒரே இந்தியப் படம் இது. இதை நடிகர் மம்முட்டி, தன துசமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.






