மாதம்பட்டி ரங்கராஜ் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் ஜாய் கிரிஸ்டில்லா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
Published on

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை 2வது திருமணம் செய்து, கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றி விட்டதாக, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி ஜாய் கிரிசில்டா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சுதா, புகார் மீது போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றம்சாட்டினார். மாதம்பட்டி ரங்கராஜ் பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவருக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார். புகார் அளித்து 40 நாட்களுக்கு பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அதுவும் உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், புகார் மீதான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டிய தேவையில்லை எனவும் சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், ஜாய் கிரிசில்டா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் அவரை விசாரணைக்கு அழைப்பதில் சிக்கல் இருந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, தங்களிடம் உள்ள ஆதாரங்களை போலீசாரிடம் அளிக்க, ஜாய் கிரிசில்டா தரப்புக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com