போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறையினர் அதிரடி விசாரணை

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் அடுக்கடுக்கான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.
சென்னை,
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது முறைகேடான பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையினரும் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக கடிதம் ஒன்றை அமலாக்கத்துறையிடம் நடிகர் ஸ்ரீகாந்த் தனது வக்கீல் மூலம் சமர்ப்பித்தார். அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை அழைக்கும் மற்றொரு நாளில் விசாரணைக்கு ஆஜராவதாக ஸ்ரீகாந்த் கூறியிருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில், சம்மன் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். காலை 10 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு கிருஷ்ணா பொறுமையாக பதிலளித்துள்ளார். அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.






