அஜித்தின் கார் விபத்து எப்படி நடந்தது? - சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ வைரல்

ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தின் போது அஜித்தின் கார் முன்னே சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் அவருடைய அணி பங்கேற்றது. பந்தயத்துக்கு முன்பாக நடந்த பயிற்சியில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து போட்டியில் இருந்து அவர் விலகினாலும் அவருடைய அணி பங்கேற்று 3-ம் இடத்தை தட்டிச் சென்றது.
அதனை தொடர்ந்து மீண்டும் அவர் கார் பந்தயத்தில் தீவிரம் காட்டி வருகிறார். அஜித்குமார் ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா நகரில் நடந்து வரும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டார். அப்போது போட்டியில் அஜித்குமார் தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரை முந்துவதற்கு முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளாகி 'பல்டி' அடித்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அஜித்குமாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து எப்படி நடந்தது என்றால், 6-வது சுற்றின் போது முன்னே சென்ற கார் திடீர் என நின்றதால் அஜித்குமாரின் கார் அதன்மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அஜித் மீது எந்த தவறும் இல்லை என அவரது காரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகள் காட்டியது.
இதற்கிடையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் தற்போது விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விபத்துக்குப் பிறகு எந்த விதமான பதற்றமும் இல்லாமல் அஜித்குமார் நிதானமாக செயல்பட்ட காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.






