'குடும்பஸ்தன்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம், லவ்வர், குட் நைட்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மணிகண்டன், சான்வே மேகன்னாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மணிகண்டனிடம் பூர்வீக வீட்டை புதுப்பிக்க சொல்கிறார் தந்தை, கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்ல விரும்புகிறார் தாய். மனைவி ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயிற்சி எடுக்கிறார். இப்படி மொத்த குடும்ப சுமையும் மணிகண்டன் தலையில் விழுகிறது.
எப்போதும் குத்திப்பேசும் சகோதரி கணவர் குருசோமசுந்தரம் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வீராப்பும் இருக்கிறது. இதற்கு மத்தியில் மணிகண்டன் வேலை பறிபோகிறது. வேலை போனதை குடும்பத்தினரிடம் மறைத்து கடன் வாங்கி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறார் மணிகண்டன். ஒரு கட்டத்தில் வேலை பறிபோன விஷயம் குடும்பத்தினருக்கு தெரிகிறது. இதனால் தடுமாறி நிற்கும் மணிகண்டன் பிரச்சினைகளை எப்படி சமாளித்து கரை சேர்கிறார் என்பது மீதி கதை.
மணிகண்டன் நடுத்தர குடும்பத்து இளைஞராக இயல்பாக நடித்து இருக்கிறார். அவரது சீரியஸான நடிப்பு பார்வையாளர்களை சிரிக்க வைப்பது கதாபாத்திரத்தின் சிறப்பு. நாயகி சான்வே மேகன்னா அன்பான, கண்டிப்பான மனைவியாக படம் முழுக்க வந்து மகிழ்ச்சி, கோபம், வருத்தம் என எல்லா உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
திமிர், நக்கல், நையாண்டி என சுயநலமிக்கவர் கதாபாத்திரத்தில் குரு சோம சுந்தரம் வாழ்ந்திருக்கிறார். அம்மாவாக வரும் கனகம், அப்பாவாக வரும் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும் கேரக்டரை உள்வாங்கி நடித்துள்ளனர். பிரசன்ன பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் கூட்டணியின் காமெடி படம் முழுக்க கலகலப்பூட்டுகிறது.
வைசாக்கின் பின்னணி இசை படத்துக்கு உதவி இருக்கிறது. சுஜித் என்.சுப்பிரமணியம் ஒளிப்பதிவு கச்சிதம். பேக்கரி தொடர்பான காட்சிகள் நீளமாக இருப்பது மாதிரியான சில குறைகள் இருந்தாலும் நடுத்தர குடும்பத்து பிரச்சினைகளை சொன்ன விதம் கவர்கிறது. சாமானியர் வாழ்வியலை தொய்வில்லாமல் பிரதிபலிக்கும் திரைக்கதை, இயல்பை மீறாத காட்சிகள், குலுங்க வைக்கும் காமெடி என தரமான படைப்பாக கொடுத்து கவனிக்க வைக்கிறார் இயக்குனர் ராஜேஸ்வர் காளிச்சாமி.