தேசிய விருது கிடைக்காதது எனக்கு வருத்தமில்லை - இசையமைப்பாளர் தேவா


தேசிய விருது கிடைக்காதது எனக்கு வருத்தமில்லை - இசையமைப்பாளர் தேவா
x
தினத்தந்தி 10 Nov 2025 2:20 PM IST (Updated: 10 Nov 2025 2:23 PM IST)
t-max-icont-min-icon

தேசிய விருதுக்காக 6 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் கைகூடவில்லை என்று தேவா மனம் திறந்த பேசியுள்ளார்.

‘மனசுக்கேத்த மகராசா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக கவனிக்கபட்ட தேவா , ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் புகழ் பெற்றார். இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ், முரளி, சிவா, போபோ சசி, ஜெய், ஆகிய 7 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.இவர்களில் தேவா 500 படங்களுக்கும் மேல் இசையமைத்து இருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா 120 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ரஜினிக்கு அண்ணாமலை, பாட்ஷா, சரத்குமாருக்கு சூரியன், வேடன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார், தேவா, இதுவரை தேசிய விருது வாங்கியதே இல்லை. தமிழக அரசின் மாநில விருதை பெற்றுள்ள இவர், கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். ஆசை படத்திற்காக தமிழக அரசின் விருதை பெற்ற தேவா, பாட்ஷா படத்திற்காக தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார அகாடமி விருதைப் பெற்றார். ‘சிவப்பு மழை’ படத்திற்காக கின்னஸ் உலக சாதனை, சினிமா எக்ஸ்பிரஸ். பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளை பெற்றிருந்தாலும், தேசிய விருதை இதுவரை பெறவில்லை.

தேவாவின் இசை பயணத்தை, ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் சமீபத்தில் பாராட்டி கவுரவித்தது. ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை தரப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமரவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தேவா, “என் திரை பயணத்தில இதுவரை தேசிய விருது கிடைக்கவில்லை. இந்த விருதுக்காக 6 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கைகூடவில்லை. இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் மகன் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு விருது கிடைத்திருப்பது எனக்கு பெருமை” என்று கூறியுள்ளார். 2021-ம் ஆண்டு ‘கருவறை’ என்ற குறும்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story