சினிமாவை விட்டு விலக நினைத்திருந்தேன் - நடிகர் கருணாகரன்

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , கருணாகரன் நடித்துள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற 31ம் தேதி வெளியாகிறது.
விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ‘ஆர்யன்’ படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 31ம் தேதி வெளியாகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து மக்களிடம் நல்ல நகைச்சுவை நடிகர் என பெயர் வாங்கியவர் நடிகர் கருணாகரன். இருந்தாலும் இவரை அவ்வப்போதே படங்களில் பார்க்க முடிகிறது. இதற்கான காரணத்தை விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கருணாகரன் பேசினார்.
நீங்கள் ஒரு திறமையான நடிகர். அப்படியிருந்தும் உங்களை சமீப காலங்களில் அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லையே என ஆர்யன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடிகர் கருணாகரன் “என்னுடைய முதல் படம் ‘கலகலப்பு’. அதன் பின் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘யாமிருக்க பயமே!’ என்று தொடர்ந்து ஹிட் படங்கள். அதனால் சினிமா இப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். சில படங்கள் சரியாக செல்லாதபோது சினிமாவை விட்டு செல்ல வேண்டும் என நிறைய தடவை முடிவு எடுத்திருக்கிறேன்.
வெற்றியின் போது இருப்பது போல் தோல்வியின் போது சினிமா இருப்பதில்லை. வேறு மாதிரி நடத்துகிறார்கள். அப்போது விஷ்ணுதான் என்னைப் போன்ற திறமையான நடிகர்கள் எல்லாம் அப்படி சென்றுவிடக் கூடாது என கூறி, அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டு பட வாய்ப்புகள் கொடுத்து மீண்டும் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார். அடுத்த மாதம் கார்த்தியின் வா வாத்தியார் படத்தில் சந்திக்கலாம்”. என்று கூறினார்.






