‘நாயகன்’ படத்தை 16 முறை பார்த்திருக்கிறேன், காட்சி வாரியாக சொல்ல முடியும்- நீதிபதி செந்தில்குமார்


‘நாயகன்’ படத்தை 16 முறை பார்த்திருக்கிறேன், காட்சி வாரியாக சொல்ல முடியும்- நீதிபதி செந்தில்குமார்
x
தினத்தந்தி 7 Nov 2025 1:13 PM IST (Updated: 7 Nov 2025 4:49 PM IST)
t-max-icont-min-icon

‘நாயகன்’ படத்தை காட்சி வாரியாக இப்போதும் என்னால் சொல்ல முடியும் என்று நீதிபதி கூறினார்.

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' திரைப்படம் பல ஆண்டுகளுக்கு பின்னர், மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில், எஸ்.ஆர். பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் ஆர் ராஜன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘நாயகன் திரைப்படத்தை தனது நிறுவனம், ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தினை வெளியிடும் உரிமையை கடந்த 2023-ம் ஆண்டு பெற்றுள்ளேன். இதனை மறைத்து வி.எஸ்.பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நாயகன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது முறைகேடான நடவடிக்கை. எனவே, நாயகன் திரைப்படத்தை மறு வெளியீடு செய்யப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த படத்தை வசூலான தொகையை கோர்ட்டில் கட்ட உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, விநியோகஸ்தர் வி.எஸ். இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், இந்திய சினிமாவில் நாயகன் திரைப்படம் ஒரு மைல்கல். இந்த படத்தை வெளியிட ஒப்பந்தம் வைத்துள்ளோம்’’ என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த படத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, எதிர்மனுதாரர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்த விசாரணையின் போது, நீதிபதி செந்தில்குமார் கூறுகையில், “நாயகன் படத்தை 16 முறை பார்த்துள்ளேன், காட்சி வாரியாக இப்போதும் என்னால் சொல்ல முடியும்” என்றும், அதேபோல வக்கீலும் 50 முறைக்கு மேல் படத்தை பார்த்தேன் என்றும் குறிப்பிட்டது கோர்ட்டு அறையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

1 More update

Next Story