அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியா? - சின்னத்திரை நடிகரிடம் போலீஸ் விசாரணை

கருணாநிதி சென்னையில் சினிமா துறை கேண்டீனில் வேலை செய்து வந்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் சினிமாத்துறை கேண்டீனில் வேலை செய்து வந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கருணாநிதியின் மனைவிக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தினேஷ் மோசடி செய்து விட்டதாக, பணகுடி போலீஸ் நிலையத்தில் கருணாநிதி பரபரப்பு புகார் அளித்தார். அதில், “தினேஷ் தனக்கு தெரிந்தவர் மூலம் என்னுடைய மனைவிக்கு, மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சத்தை தண்டையார்குளத்தில் வைத்து வாங்கினார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை.
கடந்த அக்டோபர் 23-ந்தேதி வள்ளியூருக்கு வந்திருந்த தினேஷிடம் பணத்தை திரும்ப கேட்டேன். ஆனால் தினேஷ், அவருடைய தந்தை ஆகியோர் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்” என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நடிகர் தினேஷ் நேற்று வள்ளியூர் கோர்ட்டில் நடந்து வரும் ஒரு வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்திருந்தார். அவரை பணகுடி போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அங்கிருந்து நெல்லைக்கு புறப்பட்ட தினேஷ், தன் மீதான புகார் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் மோசடி செய்துவிட்டதாக பொய் தகவல் வெளியாகியுள்ளது. வள்ளியூரில் ஒரு வழக்கு தொடர்பாக 4 ஆண்டுகளாக நியாயமாக போராடி வருகிறேன். அந்த பிரச்சினையில் எதிர்தரப்பினர் என்னை சிக்கவைக்க இவ்வாறு புகார் அளிக்க வைத்துள்ளனர்.
கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்தபோது சப்-இன்ஸ்பெக்டர் என்னை அழைத்து விசாரித்தார். அவரிடம் உண்மையை தெரிவித்தேன். சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் நான் வள்ளியூர் கோர்ட்டில் இருந்தேன். நடிகர் என்பதால், மிரட்டினால் பணம் கொடுத்துவிடுவார் என்று ஒரு கும்பல் சுற்றித்திரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






