"கடைசி வரை அந்த புண் என்னுடன் இருந்துகொண்டேதான் இருக்கும்’ - நடிகர் அஸ்வின்

கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என அன்று பேசியதற்கு அஸ்வின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
‘குக் வித் கோமாளி’ மற்றும் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் அஸ்வின். இவர் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. கதை கேட்கும்போது அந்தக் கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இந்தக் கதைக்கு முன்னதாக 40 கதைகள் கேட்டேன். இந்தக் கதை கேட்கும்போதுதான் தூங்கவில்லை' என பேசிவிட்டார். இது இணையத்தில் வைரலாக அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என அன்று பேசியதற்கு வருந்தினார். அவர் பேசுகையில்,
’நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கவில்லை, ஆனாலும் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பலர் என்னைப் பற்றி மிகவும் மோசமாக விமர்சித்தார்கள்.
மனிதநேயம் என்பதே இல்லை என்று எனக்குத் தோன்றியது. அது இன்றும் என்னை வாட்டுகிறது, கடைசி வரை அந்த புண் என்னுடன் இருந்துகொண்டே தான் இருக்கும். அது போகவே போகாது’ என்றார். இது தற்போது வைரலாகி வருகிறது.






