'ஜனநாயகன்' - 'பராசக்தி': பொங்கல் ரேசில் முந்தப்போவது யார்?

விஜய்க்கு 'ஜனநாயகன்' கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
சென்னை,
தகவல் தொழில்நுட்ப அபார வளர்ச்சி அடைவதற்கு முன்பு பொங்கல், தீபாவளி என்று பண்டிகை காலங்களில்தான் ஏராளமான படங்கள் வெளிவரும். சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள தியேட்டர்களில் பெரிய, சிறிய நடிகர்கள் நடித்த படங்கள் பாகுபாடின்றி வெளியாகும். ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸ் ஆனாலும் தியேட்டருக்கு பஞ்சம் இருக்காது. மாவட்ட அளவில் ஓடிய பிறகே வட்டார அளவிலான தியேட்டர்களில் படங்கள் வெளியிடப்படும்.
இப்படி, பண்டிகை காலங்களில் எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படங்கள் மோதிய வரலாறு எல்லாம் இருக்கிறது. ஆனால், இப்போது ஆண்டு முழுவதும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 280 தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், இதில் வணிக ரீதியிலாக வெற்றிப்படங்கள் 30 என்பதுதான் வருந்தத்தக்க செய்தி.
2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு விஜய் நடிப்பில் 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பராசக்தி' ஆகிய படங்கள் களத்தில் உள்ளன.
அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய்க்கு 'ஜனநாயகன்' கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற 'பகவந்த் கேசரி'-ன் ரீமேக் படமாக இது இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் விஜய் படம் என்றால் எப்போதுமே அதில் 'ஸ்பெஷல்' இருக்கும் என்பது ரசிகர்களுக்கு தெரியும். அதனால் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றாலும், ஜெயம் ரவி, அதர்வாவும் இருப்பதால் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை என்பதால், 'வின்டேஜ்' ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என்று கூறப்படுகிறது.
'ஜனநாயகன்', 'பராசக்தி' இரண்டில் யார் முந்துவது? என்று பார்த்தால், இளைய தளபதிக்கே ரசிகர்கள் மத்தியில் வேகம் இருப்பது தெரிகிறது.
ஜனநாயகன்
நடிப்பு: விஜய் - பூஜா ஹெக்டே
தயாரிப்பு: கே.வி.என். புரொடக்ஷன்ஸ்
டைரக்டர்: எச்.வினோத்
இசை: அனிருத்
தயாரிப்பு செலவு: சுமார் ரூ.300 கோடி
வெளியீட்டு தேதி - ஜனவரி 9
வெளியாகும் தியேட்டர்கள்: 500 முதல் 550 வரை
கதை: ஜனங்களுக்கான (மக்கள்) தலைவரின் கதை.
பராசக்தி
நடிப்பு: சிவகார்த்திகேயன் - ஸ்ரீலீலா
தயாரிப்பு: ஆகாஷ் பாஸ்கரன்
டைரக்டர்: சுதா கொங்கரா
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
தயாரிப்பு செலவு: சுமார் ரூ.250 கோடி
வெளியீட்டு தேதி - ஜனவரி 10
வெளியாகும் தியேட்டர்கள்: 400 முதல் 450 வரை
கதை: 1965-ம் ஆண்டு நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டக் கதை.






