முப்படைகள் குறித்து படம் எடுக்க ஆசை - கமல்

நாட்டிற்காக ‘அமரன்’ படத்தை எடுத்தோம், முப்படைகள் குறித்து படம் எடுக்க ஆசை என்று கமல் தெரிவித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்று குவித்தது.இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது. இந்த விழா வருகிற 28ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இவ்விழாவில் , 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த ‘அமரன்’ படம் 'ஓபன் பீட்சர் பிலிம்' (Opening Feature Film) பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது.
கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் இன்று திரையிடப்படுகிறது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி உருவான இந்த படம் 'கோல்டன் பீக்காக்' (Golden Peacock Award) விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் கமல், “ ‘அமரன்’ படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகி இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படம் திரையிட தேர்வாகி இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாட்டிற்காக இந்தப் படத்தை எடுத்தோம். சினிமா, நாடு என்று வரும்போது எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இது ஒரு உதாரணம். தொடர்ந்து நாட்டிற்காக படம் எடுப்பேன். அடுத்து முப்படைகள் குறித்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்று தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து ‘மருதநாயகம்’ படம் குறித்த கேள்விக்கு, "தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் எதுவும் சாத்தியம் என்பது என் நம்பிக்கை" என்று கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார்.






