நடிகர் யாஷுக்கு வருமான வரித்துறை வழங்கிய நோட்டீஸ் ரத்து- கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் யாஷ்சுக்கு வருமான வரித்துறை சார்பில் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
பெங்களூரு,
கன்னட திரைத்துறையில் பிரபல நடிகராக இருந்து வருபவர் யாஷ். இவர், கே.ஜி.எப். படத்தின் மூலமாக நாடு முழுவதும் பிரபலமானார். கே.ஜி.எப். படம் பிரமாண்ட வெற்றி பெற்றதுடன், ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலையும் குவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு அந்த படத்தின் தயாரிப்பாளர் விஜய்குமார் மற்றும் நடிகர் யாஷ் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் 6 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் வருமான வரி செலுத்தியது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி நடிகர் யாஷ்சுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினார்கள்.
வருமான வரித்துறையின் இந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் யாஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது நடிகர் யாஷ்சுக்கு வருமான வரித்துறை சார்பில் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனால் நடிகர் யாஷ் நிம்மதி அடைந்துள்ளார்.






