"மாமன்" சினிமா விமர்சனம்


மாமன் சினிமா விமர்சனம்
x

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘மாமன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

குழந்தை வரம் வேண்டி கவலைப்படும் பாபா பாஸ்கர் - சுவாசிகா தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை தாய் மாமனான சூரி, அக்கறை காட்டி வளர்க்கிறார். சூரியுடனேயே அந்த சிறுவன் வளர்கிறான். சூரிக்கும், ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் ஆகிறது. ஆனாலும் சிறுவனின் சுட்டித்தனத்தால் கணவனை நெருங்க முடியாமல் தவிக்கிறார், ஐஸ்வர்யா லட்சுமி.

இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது. அக்கா மகனை பிரிய முடியாமல் சூரி மனம் வெதும்புகிறார். அப்பா பாசத்தை கொட்ட முடியாமல் பாபா பாஸ்கரும் வேதனைப்படுகிறார்.ஒரு கட்டத்தில் குடும்பம் இரண்டுபட்டு போக, சிறுவனை பிரிய வேண்டிய கட்டாயத்துக்கு சூரி வருகிறார். சூரி தனது பாசத்தை விட்டுக் கொடுத்தாரா? விலகி சென்ற உறவுகளை மீண்டும் சேர்த்தாரா? என்பதே மீதி கதை.

இப்படியும் நடிக்க முடியுமா? என்ற ரீதியில் நடிப்பில் வெளுத்து கட்டியுள்ளார் சூரி. படம் முழுக்க பாசத்தை கொட்டி ரசிக்க வைத்துள்ளார். காதல், ரொமான்ஸ் காட்சிகளில் புதிய முகம் காட்டியுள்ளார். சூரிக்கு ஏற்ற ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி கலக்குகிறார். வெகுளித்தனமான பேச்சும், இயல்பான நடிப்பும் அவரை ரசிக்க வைக்கிறது.

நடிப்பில் முதிர்ச்சி காட்டி கவனிக்க வைக்கிறார் சுவாசிகா. தம்பியா? மகனா? என்ற சூழலில் அவரது அழுகை கைதேர்ந்த நடிப்புக்கு சான்று.மகன் பாசத்துக்கு ஏங்கி தவிக்கும் தந்தையாக பாபா பாஸ்கர் நினைவில் நிற்கிறார். அடாவடி சிறுவனாக பிரகீத் சிவன் கலக்கல். வாலுத்தனம் ஜாஸ்தி.

ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், பால சரவணன், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயாதேவி, நிகிலா சங்கர் என அனைவருமே கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளார்கள்.

கட்டில் உடையும் காட்சி, காது குத்தும் காட்சி, முதலிரவு அறையில் சிறுவனின் விளையாட்டு போன்றவை கலகலப்புக்கு கியாரண்டி. விமல் வருகை எதிர்பாராதது.


தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்தை தாங்கி பிடிக்கிறது. ஹேசம் அப்துல் வகாப் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது. பின்னணி இசையும் வருடல். சில இடங்களில் 'லாஜிக்' மீறல்கள் தென்பட்டாலும், உணர்வுபூர்வமான திரைக்கதை அதை மறக்கடித்து விடுகிறது.

மாமன் என்ற உறவு முறையை சுற்றி நடக்கும் உறவு சிக்கல்களை எதார்த்தமான காட்சிகளால் நிரப்பி ரசிக்கும்படியான படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்.

மாமன் - நல்ல உறவு

1 More update

Next Story