மமிதா பைஜு பிறந்தநாள்: புதிய போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய "டியூட்" படக்குழு

நடிகை மமிதா பைஜு பிறந்தநாளில் 'டியூட்' படத்தின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, 'சூப்பர் சரண்யா' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜு. இவரது நடிப்பில் வெளியான 'பிரேமலு' படம் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் மமிதா பைஜு. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
மமிதா பைஜு தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'ரெபல்' படத்தில் நடித்து அறிமுகமானார். இவர் தற்போது விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திலும் நடித்து வருகிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக இருந்த கீர்த்தீஸ்வரனின் 'டியூட்' படத்தில் இணைந்துள்ளார். 'டியூட்' படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை தரும் இளம் நடிகரான பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு இப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 'இரண்டு வானம்' படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்
இந்நிலையில், மமிதா பைஜூ பிறந்தநாளில் 'டியூட்' படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. அதில், "பிறந்தநாள் வாழ்த்துகள் குறள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், குறள் கதாபாத்திரத்தில் மமிதா பைஜு நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது






