என் படங்களில் கதாநாயகியை தேர்வு செய்யும் விதம்.. மிஷ்கின் பேச்சால் சர்ச்சை

‘ஆண் பாவம் பொல்லாதது' பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு பேசினார்.
சென்னை,
கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஆண் பாவம் பொல்லாதது' படம், வருகிற 31-ந்தேதி திரைக்கு வருகிறது.
சென்னையில் நடந்த பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, ‘‘படத்தின் கதாநாயகி மாளவிகா மனோஜ் பக்கத்து வீட்டு பொண்ணுமாதிரி இருக்கிறார். முகத்தை பார்த்து டைரக்டர் தேர்வு செய்யவில்லை. ஆடிஷன் செய்து திறமையின் அடிப்படையில் கதாநாயகியை தேர்வு செய்திருக்கிறார்.
பொதுவாக என் படங்களில் கதாநாயகி யார்? என்ற தேர்வு குறித்து உதவி இயக்குனர்களிடம் கேட்பேன். அப்போது ‘இவர் சரியாக இருப்பார், அவர் சரியாக இருப்பார்' என்றெல்லாம் என்னிடம் சொல்வார்கள். உடனே ‘இந்த பெண்ணை நீ லவ் பண்றியா?' என்று கேட்பேன். அப்படித்தான் கதாநாயகி தேர்வு என் படங்களில் அமைகிறது. அதேபோல கதாநாயகனாக நடித்திருக்கும் ரியோ ராஜ், தனது பெயரை ரியோ என்று மட்டும் வைத்துக்கொள்ளலாம். ராஜ் இனி வேண்டாம். அந்த பெயரே சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்'', என்றார். கதாநாயகி குறித்த மிஷ்கின் பேச்சு கலகலப்பை ஏற்படுத்தியது என்றாலும், வழக்கம்போல சர்ச்சைகளையும் உருவாக்கி இருக்கிறது.






