'ஜெயிலர் 2' படத்தின் அப்டேட்டை பகிர்ந்த ரஜினிகாந்த்

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை சென்றார் ரஜினிகாந்த்.
கோவை,
கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'ஜெயிலர்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ரஜினி 'கூலி' படப்பிடிப்பில் தனது போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டு அதே வேகத்தில், 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று கோவை சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அங்கு ரஜினியின் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது 'ஜெயிலர் 2' படத்தின் அப்டேட்டை ரஜினி பகிர்ந்துள்ளார். அதாவது, 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளதாகவும், படத்தின் வெளியீடு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறினார். மேலும் இன்று வெளியாகி உள்ள அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.






