ஏஐ மூலம் பெண்களை குறிவைப்பது தார்மீக வீழ்ச்சி - ராஷ்மிகா மந்தனா

ஏஐ தொழில்நுட்பத்தில் பெண்களின் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுவது குறித்து நடிகை ராஷ்மிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏஐ மூலம் பெண்களை குறிவைப்பது தார்மீக வீழ்ச்சி - ராஷ்மிகா மந்தனா
Published on

தொழில்நுட்ப வளர்ச்சி மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ள நிலையில், வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பண மோசடி, தனி நபர்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்தல் என பலவிதமான குற்றங்களிலும் தொடர்ச்சியாக சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க எவ்வளவு நடவடிக்கைகள், கடுமையான தண்டனைகள் ஆகியவை இருந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு அதில் நடைபெறும் பல விரும்பத்தகாத சம்பவங்கள் பெண்களை மிகப்பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதில் பிரபலங்கள் தொடங்கி சாதாரண பெண்கள் வரை யாரும் தப்பவில்லை. இது மிகப்பெரிய கவலையெழுப்பும் விஷயமாக மாறியுள்ளது. ஏஐ தொழில் நுட்பம் எது, உண்மை எது என தெரியாத அளவுக்கு அதன் வளர்ச்சி இருப்பதால் மக்கள் குழம்பி விடுகின்றனர். அப்படியான ஏஐ தொழில்நுட்பத்தால் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ச்சியாக பாதிப்புகளை சந்தித்து அதன் கவலைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள பதிவில்,ஏஐ என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாகும். ஆனால் அதை ஆபாசமான விஷயங்களை உருவாக்கவும், பெண்களை குறிவைக்கும் தவறான செயல்பாடுகளுக்காகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். இணையம் உண்மைகளை காட்டும் கண்ணாடியாக இல்லாமல், எதையும் மாற்றக் கூடிய ஒரு இடமாக மாறிவிட்டது. இதற்கு எதிராக எழ வேண்டும். ஒரு கண்ணியமான சமூகத்தை கட்டமைக்க ஏஐயை பயன்படுத்த வேண்டும். பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். மனிதர்கள் மனிதர்களை போல நடந்து கொள்ளவில்லை என்றால், கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு டீப் பேக் மூலம் தன்னை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியானபோது ராஷ்மிகா மந்தனா மிகப்பெரிய அளவில் வருத்தப்பட்டார். மத்திய அரசும் டீப் பேக், ஏஐ மூலம் வெளியாகும் தனிப்பட்ட நபரின் கண்ணியத்தை பாதிக்கக்கூடிய வீடியோக்களை நீக்கி அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com