சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை

நடிகை ராஜேஸ்வரி குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை
Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் ராஜேஸ்வரி. இவர் பாக்கியலட்சுமி', பனிவிழும் மலர்வனம் உட்பட பல தொடர்களில் நடித்திருக்கிறார். தவிர வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

சைதாப்பேட்டையைச் சேர்ந்த இவர் திருமணமாகி முத்தியால் பேட்டையில் வசித்து வந்தார். ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்து உள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதால் ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கிருந்தபடியே அவர் டிவி தொடர்களில் நடிப்பதற்கான படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

நேற்று இரவு ராஜேஸ்வரி சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தபோது அளவுக்கதிகமாக ரத்த அழுத்த மாத்திரையை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் ராஜேஸ்வரியின் உயிரை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலையில் உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில்தான் நடிகை ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய முழு விவரங்களும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேஸ்வரியின் மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com