இயக்குநர் வி.சேகர் மறைவிற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல்

வி.சேகரின் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை,
குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை எடுத்து மக்கள் இயக்குனர் என பெயரெடுத்தவர், வி.சேகர் (வயது 72). அவருக்கு கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். வி.சேகரின் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இயக்குநர் வி.சேகர் மறைவிற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை தெரிவித்திருப்பதாவது,
தமிழ்த்திரைப்பட துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் உற்ற தோழனாக விளங்கியவர் சகோதரர் வி.சேகர். தமிழ் சமூகத்தின் மேல் அளவற்ற அன்பும் பொறுப்புணர்ச்சியும் கொண்ட இயக்குநர் வி.சேகரின் திரைப்படங்கள் காலத்தால் மறக்க முடியாத மாணிக்கங்களாகும். தமிழர்கள் மீதும் தமிழ் மொழியின் மீதும் பேரண்பு கொண்ட சகோதரர் வி.சேகர் அவர்கள், திருவள்ளுவர் மன்றம் அமைப்பின் மூலம் இந்திய தமிழர்கள் மட்டுமல்லாது உலக தமிழர்கள் அனைவரையும் ஜாதி, மதம் கடந்து தமிழன் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றினைக்க பெரு முயற்சி செய்தவர்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் உரிமைக்காகவும் நலன்களுக்காகவும் பல்லாண்டுகள் பணிபுரிந்த பண்பாளர். உடல் நலம் இன்றி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இயக்குநர் வி.சேகர் அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை மறைந்து விட்டார் என்ற செய்தியை பெருந்துயரத்துடன் அனைவருக்கும் அறிவிக்கிறோம்.
இரவு பகல் பாராது தமிழ்த்திரைப்படத்துறையின் வளர்ச்சிக்காகவும், தமிழ் சமூகத்தின் எழுச்சிக்காகவும் அயராது பாடுபட்ட மூத்த சகோதரர் வி.சேகர் அவர்களின் மறைவு தமிழ்த்திரைப்படத்துறைக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அண்ணாருக்கு இறுதி அஞ்சலி செய்வதற்கு ஏதுவாக 15.11.2025 (சனிக்கிழமை) காலை இறுதி சடங்கு செய்வதற்கு ஏதுவாக காலை 7 மணி அளவில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை முன்பிருந்து இயக்குனர் வி.சேகர் அவர்களின் இறுதி ஊர்வலம் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் முன்னெடுப்பில் ஊர்வலமாக கிளம்பி, வழியில் 5 மணி அளவில் வளசரவாக்கம் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் அருகே ஆற்காடு இயக்குநர்கள் உறுப்பினர்கள் அஞ்சலி ஊர்வலத்தில் இணைந்து கொள்ள, ஊர்வலம் தொடர்ந்து கோடம்பாக்கம் டாக்டர் சுப்புராயன் நகர் மெயின்ரோடு எண் உள்ள இயக்குநர் வி.சேகர் அவர்கள் இல்லம் சென்றடைந்து திரை உலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
பின் மறுநாள் (16.1126253 ஞாயிற்றுக்கிழமை) திருவண்ணாமலை மாவட்டம் நெய்வானத்தம் கிராமத்தில் இறுதிசடங்கு நடைபெற உள்ளது என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






