'நூற்றுக்கு மேற்பட்டோரின் தியாகம்...திருட்டுப் பதிவிறக்கம் உள்ளத்தை சிதைக்கிறது'- சூரி


The sacrifice of over a hundred people...piracy downloads are heartbreaking - Soori
x

ஒவ்வொரு படத்திற்கு பின்னாலும் நூற்றுக்கு மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருப்பதாக சூரி கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர் சூரி, திரைப்படத்தை திருட்டு பதிவிறக்கம் செய்து பார்ப்பது சட்டவிரோதம் மட்டுமல்ல, மனிதநேயத்தையும் கைவிடும் செயல் என்று கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில்,

'ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று.

இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் அல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன.

ஒரு படம் உருவாகிறது என்றால், அது ஒரு குழந்தை பிறப்பதைப் போல. கதையிலிருந்து தொடங்கி, படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டியெழுப்பப்படுகிறது.

ஒரு படம் வென்றாலும், தோற்றாலும்… அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு, சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிரும் போது, அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு 'வியூ'க்காக, யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பைக் கலைத்து விடுகிறோம்.

திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன. சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு.

இத்தனை தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல், திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல்.

எனவே என் பணிவான வேண்டுகோள்:

திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள். திரைப்படங்களைச் சரியான வழியில் பார்த்து, அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால், திரையுலகம் இன்னும் உயரலாம்' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story