

சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான பாலையா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் அகண்டா. இந்த படம் தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
14 ரீல்ஸ் பிளஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, இஷான் சக்சேனா தயாரித்து, போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள புதிய படம் அகண்டா 2.இதில் பால கிருஷ்ணா கதாநாயகனாகவும், சம்யுக்தா மேனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆதி பினிசெட்டி வில்லனாக நடித்துள்ளார்.
3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 5ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில காரணத்தால் அறிவித்த அந்த தேதியில் படத்தினை வெளியிட முடியவில்லை. இதனால், இப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருந்த பாலையா ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், தற்போது படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைக்கான தீர்வு எட்டியதாக தெரிகின்றது. இந்த நிலையில், புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அகண்டா -2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 12 ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக டிசம்பர் 11 ந் தேதி சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.