மார்பிங் போட்டோவால் மிரட்டல்.. வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்த சின்மயி

பாடகி சின்மயி புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
மார்பிங் போட்டோவால் மிரட்டல்.. வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்த சின்மயி
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகி சின்மயி, தனது இனிமையான குரல் மற்றும் உணர்ச்சி பூர்வமான பாடல்களால் ரசிகர்களிடம் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர். ஒரு தெய்வம் தந்த பூவே, அன்பே என் அன்பே, முத்த மழை உள்ளிட்ட பல ஹிட் பாடல்களின் மூலம் பிரபலமடைந்துள்ளார்.

சமூக நியாயம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து எப்போதும் திறம்பட குரல் கொடுத்து வருகின்ற சின்மயி, சமீபத்தில் ஒரு நடிகையை குறிவைத்து உருவாக்கப்பட்ட ஏஐ மார்பிங் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளிப்படுத்தி கண்டனம் தெரிவித்தார். அதன்மூலம், அந்த புகைப்படங்களை வெளியிட்டவர்களை டேக் செய்து காவல்துறையில் புகார் அளித்தும் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சிலர் எக்ஸ் தளத்தில் சின்மயியை குறிவைத்து மார்பிங் ஏஐ புகைப்படங்களை வெளியிட்டு மோசமாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளனர். அந்த பதிவுகளை சின்மயி ஸ்கிரீன்ஷாட் எடுத்து, மோசமான கருத்துகளைப் பகிர்ந்தவர்களின் புகைப்படங்களுடன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

பின்னர், ஒரு வீடியோவையும் வெளியிட்ட அவர், பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை கடுமையாக சாடினார். அந்த வீடியோவில், இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் எப்போதும் அடங்கி இருக்க வேண்டும் என்று பலருக்கும் இன்னும் எண்ணம் உள்ளது. அப்படி அடங்கிப் போகாத பெண்கள் கூட செத்துப்போகலாம் என்று சிலர் எழுதுகின்றார்கள். முன்பெல்லாம் பேய், வசியம் என்ற பெயரில் பெண்களை சித்தரித்தார்கள்; இன்று அது ஏஐ மார்பிங் புகைப்படங்களாக மாறியுள்ளது. இந்த குரூர புத்தி கொண்டவர்களிடம் பயப்பட தேவையில்லை. நாம் தைரியமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரையும் தைரியப்படுத்த வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

சின்மயியின் இந்த தைரியமான பதில் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com