“சூப்பர் ஸ்டார்” ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
"இன்று பிறந்த நாள் காணும் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞர் அவர்களின் அன்புக்குரியவர் - தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அருமை நண்பர் - என் மீதும் எப்போதும் தனிப்பாசம் கொண்டிருப்பவர்.
75-ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்து, பவள விழாவையும் - திரையுலகில் பொன் விழாவையும் காணும் ரஜினி சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.
இந்திய திரையுலகில் அன்றைக்கும் - இன்றைக்கும் முன்வரிசையில் ஒளிரும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார், தொடர்ந்து நம்மை மகிழ்விக்கட்டும். அவர் இன்னும் பல்லாண்டு நல் ஆரோக்கியத்துடன் மகிழ்ந்திருக்க விழைகிறேன்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






