நடிகர் தர்ஷன் மீதான கொலை வழக்கில் வருகிற 17-ந் தேதி முதல் சாட்சிகளிடம் விசாரணை

அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகுமாறு ரேணுகாசாமியின் தந்தை, தாய்க்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
பெங்களூரு,
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் பெங்களூருவுக்கு காரில் கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். இதுதொடர்பாக காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் தர்ஷன், அவரது தோழியான நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் தர்ஷன் உள்பட 7 பேர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதி 10 பேர் ஜாமீனில் வெளியே இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு சிட்டிசிவில் கோர்ட்டில் நேற்றுமுன்தினம் நடந்தது. அப்போது சாட்சிகளிடம் விசாரணை தொடங்குவது மற்றும் யாருக்கெல்லாம் சம்மன் அனுப்புவது என்பது பற்றி நேற்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி வீரப்பா உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, நேற்று நீதிபதி வீரப்பா முன்னிலையில் ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது வருகிற 17-ந் தேதி முதல் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கி நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் இந்த வழக்கில் 7 மற்றும் 8-வது சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள ரேணுகாசாமியின் தந்தை காசிநாத் சிவனகவுடர் மற்றும் தாய்க்கு சம்மன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில் ரேணுகாசாமி கொலை வழக்கில் 14-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனின் நண்பர் பிரதோஷ் மறைந்த தந்தைக்கு நடக்கும் சடங்கில் பங்கேற்க 4 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.
ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினத்தில் இருந்து வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளிடம் விசாரணை தொடங்கி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.






