தொழில் தொடங்க விரும்புகிறீர்களா?


தொழில் தொடங்க விரும்புகிறீர்களா?
x
தினத்தந்தி 3 July 2022 1:30 AM GMT (Updated: 3 July 2022 1:30 AM GMT)

முதலீடுதான் தொழிலின் அஸ்திவாரமே. இது நீங்கள் ஆரம்பிக்க இருக்கும் தொழிலை பொறுத்து மாறுபடும். சிலருக்கு முதலீடு செய்வதற்கான பணவசதி இருக்கலாம். அவர்கள் சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தாலே லாபம் ஈட்ட முடியும்.

சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பல பெண்களுக்கு இருக்கும். முறையான வழிகாட்டல் இல்லாதது மற்றும் முதலீடு கள் செய்ய முடியாத காரணத்தால், அந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்திருப்பார்கள். பொருளா தாரத் தேவைக்காக, கிடைக்கும் வேலையில் சேர்ந்து மாத வருமானம் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் சரியாக ஆராய்ந்து, திட்டமிட்டு செயல்பட்டால் சொந்தமாக தொழில் தொடங்குவது சாத்தியமே. அதற்கான வழிகள் இங்கே.

தேர்வு செய்யுங்கள்:

யார் வேண்டுமானாலும் சுயதொழில் தொடங்கலாம். அதில் வெற்றியடைவதற்கு மூல மந்திரமே, சரியான தொழிலை தேர்வு செய்வதுதான். உங்களுக்குள் இருக்கும் திறமையை கண்டறிந்து தொழிலை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண்களுக்கும் வெவ்வேறு விஷயங்களில் ஆர்வம் இருக்கும். தையல், ஓவியம், கைவினை, கேக், தோசை மாவு, மசாலா பொடி, ஊறுகாய் தயாரித்தல், கால்நடை வளர்த்தல் என உங்களுக்கு பழக்கப்பட்ட ஆர்வமான தொழிலை தேர்வு செய்யலாம்.

முறையான பயிற்சி:

ஆர்வம் இருந்தாலும் முறையான பயிற்சி இல்லாமல் தொழிலில் இறங்குவது தோல்விக்கு காரணமாகலாம். இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவதோடு, தொழிலிலும் நஷ்டம் ஏற்படும். மாதவருமானம் பெறுபவர்கள் உடனடியாக வேலையில் இருந்து விலகி, பயிற்சியில்லாமல் தொழிலில் இறங்கி விடக்கூடாது. முறையான பயிற்சி பெற்ற பிறகே தொழில்தொடங்க முன்வருவது நல்லது.

திட்டமிடல்:

சுயதொழில் ஆரம்பிப்பதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது அவசியம். முதலீடு, உற்பத்தி செலவு, சந்தை வாய்ப்பு, தகுந்த இடம், வாடிக்கையாளர்கள், தொழில் கூட்டாளிகள் போன்றவற்றை பற்றி முன்னதாகவே திட்டமிட வேண்டும். இவை அனைத்துக்கும், சரியான ஏற்பாடுகள் செய்தபிறகே தொழில் தொடங்க வேண்டும். மேலும், தங்கள் தொழிலுக்கேற்ப தொழில் உரிமம், பணியிட அனுமதி, உரிமை பத்திரம் அல்லது வாடகை ஒப்பந்தம் போன்ற அனைத்து அரசு அனுமதியையும் முறையாக பெற்றிருத்தல் வேண்டும்.

முதலீடு:

முதலீடுதான் தொழிலின் அஸ்திவாரமே. இது நீங்கள் ஆரம்பிக்க இருக்கும் தொழிலை பொறுத்து மாறுபடும். சிலருக்கு முதலீடு செய்வதற்கான பணவசதி இருக்கலாம். அவர்கள் சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தாலே லாபம் ஈட்ட முடியும். பணவசதி இல்லாத பட்சத்தில் வங்கி கடன், அரசு மானியம் மற்றும் சலுகைகளை கருத்தில் கொண்டு பயன்பெறலாம். ஆரம்பத்திலேயே அதிக பணத்தை முதலீடு செய்யாமல் படிப்படியாக முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

தொழிலில் புதுமை:

எல்ேலாரையும் போல் இல்லாமல், உங்கள் தொழிலில் தனித்துவமும், புதுமையும் இருந்தாலே வாடிக்கையாளர்களை எளிதில் கவர முடியும். தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டே இருப்ப தோடு, காலத்திற்கேற்ப உங்களை மாற்றிக் கொண்டாலே நிலையான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.


Next Story