உலக நண்பர்கள் தினம்


உலக நண்பர்கள் தினம்
x
தினத்தந்தி 31 July 2022 1:30 AM GMT (Updated: 31 July 2022 1:30 AM GMT)

பெண்களின் நண்பர்கள் வட்டம் நிலையற்று போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்களின் வாழ்வில் அனைத்து காலகட்டத்திலும் வயதுவரம்பு இல்லாத ஒரு நண்பர் இருந்துகொண்டே இருப்பார்.

ம் வாழ்வில் நிகழும் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துன்பம் என அனைத்து உணர்வுகளின்போதும் உடன் இருப்பவர்கள் நண்பர்கள். நாமாக தேடி அமைத்துக்கொள்ளக்கூடிய, எதிர்பார்ப்பில்லாத உன்னத உறவு 'நட்பு'. அதை பெருமைப்படுத்தும் விதத்தில் 1958-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதியை உலக நண்பர்கள் தினமாக கொண்டாட, நண்பர்களுக்கான அமைப்பு கோரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில், 2011-ம் ஆண்டு ஐ.நா. சபை அறிவிப்பைத் தொடர்ந்து, ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும், 'உலக நண்பர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது.

ஆண்-பெண் இருவருடைய வாழ்க்கையிலும் நட்பும், நண்பர்களும் முக்கியமானது. ஆனால் பெண்களின் நட்பு வட்டம், வாழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் நிலையற்றது ஆகி விடுகிறது. எனினும், பிறந்ததில் இருந்து பருவம் அடையும் வரை தந்தை, பதின்பருவத்தில் தாய், திருமணத்துக்குப் பிறகு கணவர், குழந்தைப்பேறுக்குப் பின்பு பிள்ளைகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்பிக்கைக்குரிய உறவே, பெண்களுக்கு நண்பர்களாக மாறும்.

பெண்களின் நண்பர்கள் வட்டம் நிலையற்று போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்களின் வாழ்வில் அனைத்து காலகட்டத்திலும் வயதுவரம்பு இல்லாத ஒரு நண்பர் இருந்துகொண்டே இருப்பார். அது அவர்களோடு தினமும் உடன் பயணிக்கும் பூ விற்கும் பாட்டி, கடலை விற்கும் தாத்தா, அலுவலக பாதுகாவலர், தெருவில் விளையாடும் குழந்தைகள், கீச்சிடும் குருவி, தோட்டத்து ரோஜா என எதுவாகவும், யாராகவும் இருக்கலாம்.

காரணம், அன்புக்கும் நட்புக்கும் வயது, பாலினம், நிறம், சமூகம் போன்ற எதுவும் தடை இல்லை. எதிர்பார்ப்பற்ற நட்பு எனும் உறவை, எப்போதும் மரியாதையுடன் வழிநடத்தி வாழ்வை இனிதாக்கலாம்.


Next Story