நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்.


நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்.
x
தினத்தந்தி 20 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:33 AM GMT)

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

நீட் தேர்வு

நாமக்கல் பூங்கா சாலையில் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்தும், ஆளுனர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. (கிழக்கு), மதுரா செந்தில் (மேற்கு) ஆகியோர் தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, தி.மு.க. தீர்மானக்குழு துணைத்தலைவர் பார் இளங்கோவன், திராவிட மாடல் பாசறை பேச்சாளர் டான் அசோக், சார்பு அணி மாநில நிர்வாகிகள் முத்துவேல் ராமசுவாமி, ஆனந்தகுமார், ராணி, ராஜேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. இளைஞர் அணி, மருத்துவ அணி மற்றும் மாணவர் அணியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜேஷ்குமார் எம்.பி. கூறியதாவது:-

உண்ணாவிரதப் போராட்டம்

தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், சட்டமன்றத்தில் நீட்டை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யாததால் இளைய சமுதாய உயிர்கள் பலியாகி வருகிறது.

மாணவர்களை சிதைக்கும் உயிர் கொல்லியான நீட் தேர்வில் இருந்து விளக்கைப் பெற்றே தீருவோம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஷ்வா என்கிற விஸ்வநாத், நகராட்சி தலைவர்கள் கலாநிதி, கவிதா சங்கர், ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், நகர செயலாளர்கள் பூபதி, சிவக்குமார், ராணா ஆனந்த், என்.ஆர்.சங்கர் மற்றும் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. நகர, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story