குடும்பத்துக்குள் பாரபட்சம் மற்றும் பாகுபாடுகளை கையாளும் விதம்


குடும்பத்துக்குள் பாரபட்சம் மற்றும் பாகுபாடுகளை கையாளும் விதம்
x
தினத்தந்தி 25 Sep 2022 1:30 AM GMT (Updated: 2022-09-25T07:01:03+05:30)

பெற்றோர் பாரபட்சம் பார்ப்பதை ஏற்றுக்கொள்வது கடினம்தான். அந்த சமயங்களில், உங்களை நீங்களே கவனிக்க மறந்துவிடாதீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஈடுபடுங்கள்.

குடும்பத்துக்குள் அன்பு, அரவணைப்பு, ஆதரவு போன்றவை ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாகக் கொடுக்கப்படும்போது அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இதில் யாரேனும் ஒருவர், தனக்கு பாரபட்சம் பார்க்கப்படுவதாக உணர்ந்தால், மொத்தக் குடும்பத்தின் நிம்மதியும் குறையும். அவ்வாறான சூழ்நிலையை குடும்ப உறுப்பினர்கள் சந்திக்கும்போது, அதை பொறுமையாக கையாள்வது நல்லது.

பெற்றோர் உங்களிடம் பாரபட்சம் காட்டுவதாக உணர்ந்தால் அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். பெற்றோர் இருவரும் அமைதியான மனநிலையில் இருக்கும்போது அவர்களை அணுகுங்கள். சமீப காலத்தில் நடந்த சில சம்பவங்களை உதாரணமாகச் சொல்லி, உங்களின் வேதனையைப் புரியவைக்க முயற்சி செய்யுங்கள். குற்றம் சாட்டும் விதமாக பேசாமல், நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை மட்டும் எடுத்துக் கூறுங்கள்.

உங்கள் உணர்வுகளை நிதானமாகக் கூறிய பிறகு, அவர்களின் கருத்துக்களைக் கேளுங்கள். அவர்கள் உங்கள் உடன்பிறப்புகளுக்கு அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதற்கு உங்களுக்குத் தெரியாத காரணங்கள் இருக்கலாம். அவர்கள் பேசும்போது இடையில் குறுக்கிடவோ அல்லது கத்தவோ செய்யாதீர்கள்.

அவர்கள் கூறும் காரணங்கள் நியாயமற்றதாகத் தோன்றினாலும், உங்களை வருத்தப்படுத்தினாலும், உங்கள் பெற்றோருடன் வாதம் செய்யாமல் அமைதியாக இருங்கள். உணர்ச்சி வசப்படுவதைத் தவிருங்கள். பேசும் விஷயங்கள் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்தால் உரையாடலில் இருந்து விலகிவிடுங்கள்.

உங்களைப்போலவே, உங்கள் நண்பர்களும் தங்கள் உடன்பிறந்தவர்களுக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் பெற்றோர்களைக் கொண்டிருக்கலாம். அவர்களுடன் பேசுங்கள். அவர்கள் அந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பெற்றோர் பாரபட்சம் பார்ப்பதை ஏற்றுக்கொள்வது கடினம்தான். அந்த சமயங்களில், உங்களை நீங்களே கவனிக்க மறந்துவிடாதீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஈடுபடுங்கள். பெற்றோர் மற்றும் மற்றவர்களிடம் எப்போதும் மரியாதையுடன் இருங்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்யும்போது நன்றி சொல்லுங்கள். எப்போதும் அவர்களைப் புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். அவர்கள் ஏதாவது சிரமத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள். அப்போது உங்கள் மீது மரியாதை ஏற்படும். அவர்களது செயல்களில் அன்பு அதிகரிக்கும். பாரபட்சமான நிலை மாறும்.


Next Story