லாபம் தரும் இயற்கை விவசாயம் - தேவி


லாபம் தரும் இயற்கை விவசாயம் - தேவி
x
தினத்தந்தி 28 Aug 2022 1:30 AM GMT (Updated: 28 Aug 2022 1:31 AM GMT)

எனக்குச் சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கரில் 250 தென்னை மரங்களை நடவு செய்துள்ளேன். தென்னங்கன்றை நட்ட நாள் முதல் இன்று வரை எந்தவிதமான ரசாயன உரங்களும் அதற்குப் பயன்படுத்தியது கிடையாது.

"நமக்காக உணவு தரும் பூமிக்கு நாம் கொடுக்க வேண்டிய பரிசு, நிறைய மரங்களை நடுவது தான்" என்கிறார் தேவி. தாராபுரம் கணபதிபாளையம் பகுதியில் வசித்து வரும் இவர், அழிந்து வரும் இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்து வருகிறார். தனது இயற்கை விவசாய அனுபவங்கள் குறித்து நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

நான் எம்.ஏ., பி.எட். படித்த இல்லத்தரசி. எனது தந்தை மற்றும் மாமனார் இருவரும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கணவர் வேலுச்சாமி அரசுத் துறையில் பணியாற்றியதால் விவசாயத்தைத் தொடர முடியவில்லை. இதனிடையே 2015-ம் ஆண்டு முதன் முறையாக எங்கள் நிலத்தில் சாம்பார் வெங்காயம் விளைவித்தேன். ஆரம்பத்தில் விவசாயம் பற்றி எதுவுமே தெரியாது. எனவே கடைகளில் கிடைக்கும் உரம் மற்றும் பூச்சி மருந்துகளையே பயன்படுத்தினேன். வாரந்தோறும் புதுப்புது ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவது எனக்கு மிகுந்த கவலை அளித்தது. எனவே இயற்கை விவசாயத்தைக் கற்க வேண்டும் என விடாமுயற்சியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன்.

இயற்கை விவசாயத்தை எப்படி கற்றுக்கொண்டீர்கள்?

ஒரு நாள் செய்தித்தாளில் 'ஜீரோ பட்ஜெட்' என்ற பெயரில் இயற்கை விவசாய வகுப்பு குறித்த விளம்பரம் ஒன்றைப் பார்த்து விண்ணப்பித்தேன். 7 நாட்கள் நடைபெற்ற வகுப்பில், ரசாயன உரங்களால் மாசடைந்த நிலத்தை எவ்வாறு இயற்கை விவசாயத்திற்கு ஏற்றபடி மீட்டெடுப்பது, இயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிப்பது, பஞ்சகவ்யம், 3ஜி கரைசல் உள்ளிட்டவற்றை வீட்டிலேயே தயாரிப்பது ஆகியவற்றைக் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பயிற்சி வகுப்பிற்கு அடுத்தபடியாக, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் புத்தகங்களைப் படித்தேன். அதன் மூலமாக கிடைத்த உத்வேகத்தால், இன்று என்னால் இயற்கை விவசாயத்தைக் கற்று, அதை லாபகரமாகவும் மாற்ற முடிந்தது.

இயற்கை விவசாயத்திற்கு ஏற்றதாக நிலத்தை எப்படித் தயார் செய்தீர்கள்?

இயற்கை விவசாயம் செய்ய விரும்புவோரிடம் நாட்டு மாடு இருப்பது அவசியம். ஏனெனில், நாட்டு மாட்டின் கோமியம், சாணம் ஆகியவையே இயற்கை விவசாயத்திற்கான ஆதாரமாகும். 2015-ம் ஆண்டின் இறுதியில் இயற்கை விவசாயத்தை கையில் எடுக்க முடிவெடுத்தபோது நிலம் முழுவதையும் சீர் செய்ய வேண்டியிருந்தது. முதலில் மாட்டு சாணம், வேப்பம் புண்ணாக்கு, மக்கிய இலை, தழைகள் ஆகியவற்றைக் கொண்டு நிலத்தை நன்றாக உழுதோம். அதன் பின்னர் முற்றிலும் இயற்கையான முறையில் சாம்பார் வெங்காயத்தை நடவு செய்தேன். அப்போது எனக்கு கிடைத்த மன திருப்தியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.


இயற்கை முறையில் எவ்வாறு காய்கறிகளை விளைவிக்கிறீர்கள்?

எனக்குச் சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கரில் 250 தென்னை மரங்களை நடவு செய்துள்ளேன். தென்னங்கன்றை நட்ட நாள் முதல் இன்று வரை எந்தவிதமான ரசாயன உரங்களும் அதற்குப் பயன்படுத்தியது கிடையாது. முழுவதும் இயற்கை உரங்களை மட்டுமே இட்டு வருகிறேன். தென்னைக்கு ஊடுபயிராக உளுந்து, தட்டைப் பயறு போன்றவற்றைப் பயிர் செய்துள்ளேன். கத்தரிக்காய், தக்காளி, சாம்பார் வெங்காயம், முருங்கை போன்ற காய்கறிகளையும் விளைவித்து வருகிறேன். அடுத்தடுத்த நடவுக்கு தேவையான விதைகளைக் கூட எனது தோட்டத்தில் இருந்தே சேகரித்துக் கொள்கிறேன்.

செடிகளில் பூச்சிகளை விரட்ட 'பத்து இலை கரைசல்' எனப்படும் வேப்பிலை, கற்றாழை, எருக்க இலை போன்ற 10 வகையான இலைகளை ஒரு மாதத்திற்கு கோமியம் மற்றும் மாட்டு சாணத்துடன் சேர்த்து தெளிப்பேன். உடனடியாக பூச்சிகளை விரட்ட வேண்டும் என்றால் '3ஜி கரைசல்' எனப்படும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நாட்டு மாட்டு கோமியத்தில் கொதிக்க வைத்து, ஆறிய பின்பு செடிகள் மீது தெளிப்பேன்.

காய்கறிகளை விற்பனை செய்வதில் எத்தகைய யுக்தியைப் பின்பற்றுகிறீர்கள்?

நான் விளைவிக்கும் காய்கறிகளை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறேன். இப்போதைய காலகட்டத்தில் அனைவரது கையிலும் செல்போன் உள்ளது. வாட்ஸ்-ஆப் மூலமாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு பொருட்களை விற்பனை செய்வது சுலபமானது.

எங்கள் பகுதியில் உள்ள சில இயற்கை விவசாயிகள் ஒன்றிணைந்து 'செம்புலம் இயற்கை விவசாயிகள்' என்ற வாட்ஸ்-ஆப் குழுவை நடத்தி வருகிறோம். இந்தக் குழு மூலமாக வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் வாடிக்கையாளர்கள் கேட்கும் காய்கறிகளை அறுவடை செய்து பார்சல் அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கிறேன். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் என்னிடம் தொடர்பு கொண்டு காய்கறிகளை வாங்குகிறார்கள். இதன் மூலம் வருமானம் ஈட்டுவதோடு, மனநிறைவையும் பெற முடிகிறது.

இயற்கை விவசாயத்தில் இருந்து லாபம் ஈட்ட முடியுமா? இளம் விவசாயிகளுக்கு நீங்கள் சொல்வது என்ன?

'இயற்கை விவசாயம் லாபம் தரக்கூடியது அல்ல' என விவசாயிகள் நினைக்கிறார்கள். ஆனால், நான் இயற்கை முறையில் விவசாயம் செய்வதோடு, அதனை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்று லாபம் ஈட்டி வருகிறேன். காய்கறிகள், தேங்காய், இளநீர் போன்றவற்றை நேரடியாக விற்பதோடு மட்டுமில்லாமல் மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து வருகிறேன்.

எங்கள் தோட்டத்தில் இயற்கை முறையில் விளையும் தென்னை, வேர்க்கடலை, ஆமணக்கு போன்றவற்றில் இருந்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்கிறேன். முருங்கை இலையைக் கொண்டு இட்லி பொடி, சாதப்பொடி, சூப் பொடி போன்றவற்றையும், முடக்கத்தான், வல்லாரை, தூதுவளை போன்ற மூலிகைகளில் இருந்து சூப் பொடிகளையும் முற்றிலும் இயற்கை முறையில் தயார் செய்து ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறேன். இயற்கை விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகளுக்கும் விநியோகித்து வருகிறேன்.

இயற்கை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் செய்கிறேன். என்னிடம் இயற்கை விவசாயம் குறித்து சந்தேகம் கேட்பவர்களுக்கு தேவையான விளக்கம் அளிக்கிறேன். இயற்கை விவசாயத்தை மேம்படுத்தி வருவதோடு, கணபதிபாளையம் முழுவதும் 1500 மரக்கன்றுகளை நட்டுள்ளேன்" என்று சமூக அக்கறையோடு சொல்லி முடித்தார் தேவி.


Next Story