தனித்துவமான திருமண திட்டமிடல்


தனித்துவமான திருமண திட்டமிடல்
x
தினத்தந்தி 18 Sep 2022 1:30 AM GMT (Updated: 18 Sep 2022 1:30 AM GMT)

பாரம்பரியத்திற்கு ஏற்ப அல்லது திருமண நிகழ்வு திட்டமிடலுக்கு ஏற்ப உங்கள் திருமண ஆடையை வடிவமைத்துக் கொள்ளலாம். அதற்கான கைவினை வேலைப்பாடுகள் அந்த ஆடையில் இருப்பது, தனித்துவமாக இருக்கும். குறிப்பாக, எம்பிராய்டரி, ஓவியங்கள் என திருமண ஆடைகளை அழகுபடுத்தலாம். பழங்கால பாரம்பரிய உடைகளைக் கண்டறிந்து அணிந்தால் அது மேலும் தனித்துவம் பெறும்.

திருமணம், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமான நிகழ்வு. இளைய தலைமுறையினர் தங்கள் திருமணத்தை, மறக்க முடியாத நினைவாக மாற்ற விரும்புகின்றனர். அவ்வாறு திருமணத்தை, தனித்துவமாகத் திட்டமிட நினைப்பவர்களுக்கு சில ஆலோசனைகள்.

உள்ளூர் கலைகளுக்கு வாய்ப்பு:

திருமணத்தில் பெரும்பாலும் பூக்களினால் ஆன அலங்காரத்திற்கே பலரும் முக்கியத்துவம் தருகின்றனர். இதற்குப் பதிலாக, கைவினைப் பொருட்கள், தனிப்பட்ட அலங்காரங்கள், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு திட்டமிடலாம்.

மேலும், இது நலிவடைந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதுடன், அவர்களுக்கான அங்கீகாரத்துக்கும் வழிவகுக்கும்.

பட்ஜெட்டில் கவனம்:

முதலில் திருமணத்திற்கு எந்த வகையான 'தீம்' இருக்கலாம் என்பதை சரியாகத் தீர்மானிக்க வேண்டும். அலங்காரம், பரிசுப் பொருட்கள் முதல் அழைப்பிதழ் அட்டைகள் வரை அனைத்தும் அதற்கேற்ப திட்டமிட வேண்டும். அவை கைவினைப் பொருளாக இருக்கும்போது, தனித்துவமாக இருப்பதுடன், பட்ஜெட்டும் நம் கட்டுக்குள் அடங்கும்.

உணவு:

திருமணம் நடக்கும் கால நிலை மற்றும் அதற்குரிய சிறப்பு உணவுகள் போன்றவற்றை திட்டமிட்டு விருந்து ஏற்பாடு செய்யலாம். பாரம்பரிய முறையில் திருமணம் நடத்துவதென்றால், விருந்தும் அதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.

பரிசுப் பொருட்கள்:

உள்ளூரின் சுவையான புகழ்பெற்ற உணவுகள், கைவினைப் பொருட்கள், அந்தந்த பகுதியில் சிறப்பு வாய்ந்த பொருட்கள் என மாறுபட்ட ஏதாவது ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கலாம். மேலும், நன்றி அட்டையுடன் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட பரிசுக்கூடைகளை வழங்கலாம்.

திருமண உடை:

பாரம்பரியத்திற்கு ஏற்ப அல்லது திருமண நிகழ்வு திட்டமிடலுக்கு ஏற்ப உங்கள் திருமண ஆடையை வடிவமைத்துக் கொள்ளலாம். அதற்கான கைவினை வேலைப்பாடுகள் அந்த ஆடையில் இருப்பது, தனித்துவமாக இருக்கும். குறிப்பாக, எம்பிராய்டரி, ஓவியங்கள் என திருமண ஆடைகளை அழகுபடுத்தலாம். பழங்கால பாரம்பரிய உடைகளைக் கண்டறிந்து அணிந்தால் அது மேலும் தனித்துவம் பெறும்.

அழைப்பிதழ்:

அழைப்பிதழை வழக்கமான முறைகளில் வடிவமைக்காமல், வித்தியாசமான வாசனை மலர்கள், இலைகள் கொண்டு வடிவமைக்கலாம். தனித்துவமான அலங்காரங்களை அதனுடன் இணைக்கலாம். ஓவியம் வரையத் தெரிந்தவராக இருந்தால், வித்தியாசமான ஓவியங்களை அழைப்பிதழ்களில் வரைந்து, நீங்களே உங்களின் அழைப்பிதழை வடிவமைக்கலாம்.


Next Story