ஆடி அமாவாசை திருவிழா: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நாளை கால்நாட்டு விழா

ஆடி அமாவாசை விழாவிற்காக கால்நாட்டப்பட்டவுடன் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் விரதம் தொடங்குவார்கள்.
நெல்லை மாவட்டம் காரையாறு பகுதியில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை மற்றும் பங்குனி உத்திரம் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் செய்து வழிபடுவது வழக்கம். மேலும் குலதெய்வம் தெரியாதவர்களும் சொரிமுத்து அய்யனாரை தங்கள் குலதெய்வமாக ஏற்று குலதெய்வ வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு வருகிற 24-ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோவிலில் நாளை கால்நாட்டு விழா நடைபெறுகிறது. கால்நாட்டப்பட்டவுடன் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள், வல்லைய காரர்கள், பூக்குழி இறங்குபவர்கள், கோமரத்தாடிகள் உள்ளிட்டோர் விரதம் தொடங்குவார்கள்.
ஆடி அமாவாசையன்று தீர்த்தவாரி நடைபெறும். இதை முன்னிட்டு 24 மற்றும் 25-ந்தேதி என இரு நாட்களிலும், மாலை 5 மணிக்கு பிரம்மாட்சி அம்மன் சன்னதி, தளவாய் மாடசாமி சன்னதி மற்றும் பட்டவராயன் சன்னதி முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்குதலும், பக்தர்கள் முன் சிங்கம்பட்டி ஜமீன் ராஜ தர்பாரில் காட்சியளித்தலும் நடைபெறும். வருகிற 26-ந்தேதி சிங்கம்பட்டி ஜமீன் சாமி தரிசனம் நடைபெறும். 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தளவாய் மாடசாமி, சங்கிலி பூதத்தார், இசக்கியம்மன், பட்டவராயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






