ஆடிப்பூர திருவிழா: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்


ஆடிப்பூர திருவிழா: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
x

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி அருள்பாலித்து வருகிறார்கள். சிவபெருமான் எமனை காலால் எட்டி உதைத்த தலமாகும். ஆயுள் விருத்திக்காக உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் இக்கோவிலில் நடைபெறுகின்றன. இப்பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 19 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் வீதி உலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அவ்வகையில் இன்று 9-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. மேளதாளங்கள், வாணவேடிக்கை முழங்க உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளியதும், தேர் வடம் பிடிக்கப்பட்டது.

மேல வீதியில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்ட தேர், வடக்கு ரத வீதி, கீழ ரத வதி, தெற்கு ரத வீதி வழியாக வலம் வந்து மீண்டும் மேல வீதியில் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.

1 More update

Next Story