நீதியை நிலைநாட்டும் தர்மலிங்கேஸ்வரர்

மதுக்கரையில் மலைமீது அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்படுகிறது.
கோவை - பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரையில் பழமை வாய்ந்த தர்மலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மலைமீது அமையப்பெற்ற இக்கோவிலுக்கு, ஏறத்தாழ 850 படிகளுக்கு மேல் ஏறி உச்சியில் சென்றால் தர்மலிங்கேஸ்வரரை தரிசிக்கலாம்.
தர்மர் வழிபட்ட தலம்
மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது, இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டுள்ளார். அவர் சிவ வழிபாடு செய்தபோது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காவல் புரிந்ததாக இக்கோவில் தல புராணம் கூறுகிறது. பீமன் காவல் காத்ததற்கு சான்றாக இக்கோவிலில் பீமனுக்கு தனிச் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இதை காவல் தெய்வமாக கருதி பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். தர்மர் வழிபட்ட காரணத்தால் இத்தல இறைவன் 'தர்ம லிங்கேஸ்வரர்' என்று அழைக்கப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது பசுமாட்டை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தார். அப்போது மலை உச்சியில் உள்ள சுயம்புலிங்கத்திற்கு மாடு பால் சொரிந்து கொண்டு இருந்ததாக வரலாறு கூறுகிறது. அந்த நிகழ்வுக்கு பின்பு தான் இந்த தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு கிராம மக்கள் படையெடுக்க தொடங்கினர். மேலும் சேர, சோழ மன்னர்களும் கோவிலின் பின்புறத்திற்கு செல்லும் பாதை வழியாக இங்கு வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு
கோவில் இருக்கும் மலை அடிவாரத்தில் விநாயகர் சன்னிதியும், நவக்கிரக சன்னிதியும் உள்ளன. அதில், நவக்கிரக சன்னிதியின் அருகில் 'மும்மூர்த்தி மரம்' என்றழைக்கப்படும் மாமரம் இருக்கிறது. இந்த மரத்தில் மூன்று வகையான சுவையுடைய மாங்கனிகள் காய்க்கின்றன. விநாயகர் கோவிலுக்கு பின்புறம் ஒரு மண்டபமும், அதை அடுத்து மிகப் பழமையான புற்று ஒன்றும் உள்ளது.
இந்த புற்றில் வயது முதிர்ந்த பாம்பு இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதன் அருகே ஒரு கிணறு உள்ளது. கடுமையான வறட்சி காலத்திலும், இந்த கிணறு வற்றாமல் நீர் சுரந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இந்த கிணற்றிலிருந்து தான் மலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலைப் படிக்கட்டு வழியே நடந்து சென்றால் அரை மணி நேரத்தில் மலையின் உச்சியை அடைந்து விடலாம். அங்கு கிழக்கு நோக்கியவாறு கோவில் அமைந்துள்ளது. கோவிலில் மகாமண்டபம், பலிபீடம், அர்த்த மண்டபம் உள்ளன. கருவறையில் தர்மலிங்கேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
சுவாமியின் எதிர்புறத்தில் நந்தியும். வலப்புறத்தில் விநாயகரும். இடப்புறத்தில் முருகனும் அருள்பாலிக்கிறார்கள். இப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் இவரை குல தெய்வமாக வழிபடுகிறார்கள். கார்த்திகை மாதத்தில் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முறைப்படி 3 நாட்களுக்கு மலைமீது தீபம் ஏற்றுகின்றனர். இக்கோவில் தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது.
வழிபாடு
பௌர்ணமி நாட்களில் இந்த மலையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். தர்மர் வழிபட்ட ஆலயம் என்பதால் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நியாயம், நீதி வேண்டுபவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். மகாசிவராத்திரியில் விடிய, விடிய கோவிலில் பஜனை நடத்தப்படுகிறது. அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்படுகிறது. ஐப்பசி பௌர்ணமி மட்டுமின்றி, தைப்பூசத்தன்றும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆலயம், காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
கோவையில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பாலக்காடு சாலையில் மதுக்கரை மரப்பாலம் என்ற ஊர் உள்ளது. இதன் அருகே மேற்கு பகுதியில் மலையின் மீது தர்மலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.






