சிவனும், துர்க்கை அம்மனும் அருள்மழை பொழியும் ‘பட்டீஸ்வரம்’


வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் இருந்தால் பட்டீஸ்வரம் துர்க்கையை மனதார நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தஞ்சாவூர்

வீரத்துக்கும், வெற்றிக்கும் அதிபதியான துர்க்கை, அன்னை பராசக்தியின் வடிவம் ஆவார். அந்த பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக தேர்ந்தெடுத்த வனம் தான் ‘பட்டீஸ்வரம்’.

இங்கு பராசக்தி தவம் செய்வதற்கு தேவர்கள் மரம், செடி, கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர். கேட்டதை தரும் தேவலோக தெய்வீகப் பசுவான காமதேனு, பராசக்திக்கு உதவுவதற்காக தனது மகள் பட்டியை இங்கு அனுப்பியதாக தல புராணம் கூறுகிறது.

பராசக்தியின் தவத்துக்கு மனம் இரங்கிய சிவபெருமான், சடைமுடியுடன் ‘கபர்தீஸ்வரராக’ காட்சி தந்தார். இந்த வனத்தின் பெருமையையும், தூய்மையையும் உணர்ந்த ‘பட்டி’, தானும் சிவபெருமானை பூஜிக்க விரும்பி மணலினால் லிங்கம் அமைத்து பூஜித்து வந்தது. தனது தூய்மையான பாலைக் கொண்டும், அங்கு உள்ள ‘ஞானவாவி’ தீர்த்தத்தை கொண்டும் அபிஷேகம் செய்து வழிபட்டது. பெருமான் அந்த வழிபாட்டுக்கு மகிழ்ந்து மணலினால் ஆன லிங்கத்தில் நிலையாக அமர்ந்தருளினார். பட்டிக்கன்று வழிபட்டதால் இந்த ஊருக்கு ‘பட்டீஸ்வரம்’ என்று பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

கோடி தீர்த்தம்

கோவிலின் முதல் திருச்சுற்றில் உள்ள நடு மண்டபத்தில் மூலவர் தேனுபுரீஸ்வரர் எனும் பட்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. அதன் அருகே சோமாஸ்கந்தர், சுற்றிலும் சப்தமாதர், மகாலிங்கம், ராமலிங்கம், லட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர், சூரியன், ரேணுகாதேவி, சுவர்ண விநாயகர் மற்றும் நவக்கிரக சன்னிதிகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

வடபுறத்தில் அம்மன் ஞானாம்பிகை சன்னிதி உள்ளது. அம்மன் சன்னிதியில் உள்ள மண்டபம் கலையம்சம் வாய்ந்தது. இந்த மண்டப தூண்களில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயாஹத்தி தோஷத்தை போக்க, ராமர் இங்கு தன் வில்லின் முனையால் ‘கோடி தீர்த்தம்’ என்ற கிணற்றை தோற்றுவித்து, அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு தோஷத்தை போக்கி கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. இங்கு ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் ‘ராமலிங்கம்’ என்று வழங்கப்படுகிறது.

ராமர், விஷ்ணுவின் அவதாரம் என்றபோதிலும், மூன்று தலங்களில் ராமரே சிவனை பிரதிஷ்டை செய்துள்ளார். அவற்றில் ஒன்று, இந்த பட்டீஸ்வரம் கோவில்.

துர்க்கை

பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகை கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்துக்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாக கூறுகிறார்கள்.

துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன், சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும். ஆனால் பட்டீஸ்வரம் துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது. அபய கரத்துடன் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள்பாலிக்கிறார்.

அருள்வாக்கு பெற்ற சோழ மன்னர்கள்

மாமன்னன் ராஜராஜ சோழன் முதலான சோழ மன்னர்கள் அனைவராலும் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யப்பட்ட அம்பிகை இந்த துர்க்கை. சோழமன்னர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும், வெற்றி வாகை சூட போர்க்களம் புகும்போதும் இந்த தேவியின் அருள்வாக்கு பெற்றனர் என்பது வரலாறு.

பட்டீஸ்வரம் துர்க்கைக்கு தாமரை ரொம்பவே இஷ்டம். தாமரை மலர்கள் அல்லது அரளி மாலை கொண்டு துர்க்கைக்கு சாற்றுவது மிகச் சிறந்தது. துர்க்கைக்கு எலுமிச்சை பழ மாலை சாத்துகிறார்கள். எலுமிச்சை விளக்கு ஏற்றுகிறார்கள். அம்மனுக்கு புடவை சாற்றியும் பக்தர்கள் இக்கோவிலில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

குழப்பங்கள் தீர்க்கும் பட்டீஸ்வரம் துர்க்கை

வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் இருந்தால் பட்டீஸ்வரம் துர்க்கையை மனதார நினைத்து தீபம் ஏற்றுங்கள். நெய் தீபம் அல்லது எலுமிச்சை தீபம் ஏற்றலாம். அந்த தீபத்தையே துர்க்கையாக நினைத்து வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். பிரிந்த கணவன் - மனைவி ஒன்றுசேருவார்கள். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் மாறி, அமைதியும், ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும் என்பது நம்பிக்கை.

திருமண வரம், குழந்தை பாக்கியம், வீடு வாங்க வேண்டும் என வேண்டுபவர்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடலாம். மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் முடிந்து வைத்துக்கொள்ளவேண்டும். அதை பூஜை அறையில் வைத்து, தினமும் குங்கும அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளவேண்டும். இவ்வாறு வேண்டினால் திருமணம் இனிதே நடந்தேறும். வீடு வாசல் வாங்கும் நிலை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பின்னர் பட்டீஸ்வரம் செல்லும்போது துர்க்கைக்கு அந்த காணிக்கையை, மஞ்சள் துணியுடன் அப்படியே உண்டியலில் செலுத்திவிடவேண்டும்.

விழாக்கள்

வைகாசி விசாக விழா, ஆனி மாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா, மார்கழி அமாவாசை நாளில் பஞ்ச மூர்த்திகள் பல வாகனங்களில் புறப்பட்டு வீதிவலம் வந்து கோடி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும் விழா ஆகிய விழாக்கள் இக்கோவிலில் பிரசித்தம்.

அமைவிடம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலை ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ளது பட்டீஸ்வரம். தஞ்சையில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தை தஞ்சை-கும்பகோணம்-விக்ரவாண்டி சாலை வழியாக சென்றடையலாம். சுவாமிமலையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பட்டீஸ்வரம் அமைந்துள்ளது.

சிவன் கோவிலில் துர்க்கையின் ராஜ்ஜியம்

சிவன் கோவில்களில் கருவறையை சுற்றி உள்ள சுவரில் காட்சி தருபவர்கள் தான் கோஷ்ட தேவதைகள். பிரதான தெய்வத்தைச் சுற்றி அமைக்கப்படும் துணை தெய்வங்கள். பொதுவாக சிவன் கோவில் கருவறை சுவரில் தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா அல்லது துர்க்கை போன்ற தெய்வங்கள் அருள் பாலிப்பார்கள். பெரும்பாலான கோவில்களில் துர்க்கை கோஷ்ட தேவதையாக அருள்பாலிப்பார். ஆனால் பிரமாண்டமான சிவன் கோவிலான பட்டீஸ்வரத்தில் துர்க்கை தனி சன்னிதியில் அருள்மழை பொழிகிறார். அவருடைய ராஜ்ஜியமே இங்கு பிரதானம்.

1 More update

Next Story