அடிவார முகாம்களில் குவியும் பக்தர்கள்.. அமர்நாத் யாத்திரையில் இதுவரை 3.21 லட்சம் பேர் தரிசனம்


அடிவார முகாம்களில் குவியும் பக்தர்கள்.. அமர்நாத் யாத்திரையில் இதுவரை 3.21 லட்சம் பேர் தரிசனம்
x
தினத்தந்தி 22 July 2025 4:24 PM IST (Updated: 22 July 2025 5:03 PM IST)
t-max-icont-min-icon

ஜம்முவிலிருந்து இன்று 1,250 யாத்ரீகர்கள் பால்டால் அடிவார முகாமுக்கும், 2,286 யாத்ரீகர்கள் பஹல்காம் அடிவார முகாமுக்கும் புறப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பஹல்காமில் இருந்து 48 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பல்டால் ஆகிய இரு பாதைகள் வழியாகவும் பக்தர்கள் யாத்திரையாக சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்தவண்ணம் உள்ளனர். அமர்யாத் யாத்திரையை முன்னிட்டு பக்தர்களுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாத்திரை தொடங்கியதில் இருந்து நேற்று வரை, அதாவது 19 நாளில் 3.21 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்சா பந்தன் வரை அமர்நாத் யாத்திரை நடைபெறும்.

இன்று ஜம்முவிலிருந்து 3,536 யாத்ரீகர்கள் புறப்பட்டனர். இவர்களில் 1,250 யாத்ரீகர்கள் 48 வாகனங்களில் இன்று அதிகாலை 3:33 மணிக்கு பால்டால் அடிவார முகாமுக்குப் புறப்பட்டனர். 2,286 யாத்ரீகர்கள் 84 வாகனங்களில் அதிகாலை 4:06 மணிக்கு பஹல்காம் அடிவார முகாமுக்குப் புறப்பட்டனர்.

அடிவார முகாம்களுக்கு வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இவர்கள் அடிவார முகாம்களில் இருந்து யாத்திரையை தொடங்குகிறார்கள்.

1 More update

Next Story