சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு


சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Feb 2025 2:11 PM IST (Updated: 18 Feb 2025 2:11 PM IST)
t-max-icont-min-icon

விழா நாட்களில் தினமும் தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் வாகன சேவைகள் நடக்கின்றன.

திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக முழுவீச்சில் நடைபெற்றன. பிரம்மோற்சவத்தையொட்டி கடந்த 13-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலையில் ஆகம முறைப்படி பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதையொட்டி காலை 6.30 மணி முதல் 8.15 மணி வரை சுவாமி வாகன வீதியுலா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கோவில் அர்ச்சகர்கள் விஸ்வக்சேன ஆராதனை, வாஸ்துஹோமம், கருட லிங்கஹோமம், கருட பிரதிஷ்டை, ரக்சா பந்தனம் உள்ளிட்ட பூஜைகளை செய்தனர். பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி முன்னிலையில், பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

26-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் வாகன சேவைகள் நடக்கின்றன.

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீனிவாச மங்காபுரத்தில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மம் தெரிவித்தார்.

மேலும், பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை 22-ம் தேதி நடைபெறும். பிப்ரவரி 23-ம் தேதி தங்கத் தேரோட்டம், 25-ம் தேதி மரத் தேரோட்டம், 26-ம் தேதி சக்கரஸ்நானம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.


Next Story