ஜாதக ரீதியாக பிரச்சினையா.. தோஷங்களால் கவலையா..? இந்த ஆலயத்திற்கு ஒருமுறை போய் பாருங்க..!

பிரம்ம தேவரின் சன்னிதியில் ஜாதகத்தை வைத்து வழிபாடு செய்தால், பிரச்சினைகள் விரைவில் நீங்கி நன்மை நடைபெறும் என்பது நம்பிக்கை.
திருச்சி மாவட்டத்தில் உள்ளது, திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் பிரம்மனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. பிரம்மன் தன்னுடைய சாபம் நீங்குவதற்காக, இத்தலத்தில் சிவபெருமானை 12 சிவலிங்க வடிவில் வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. இதையடுத்து சாபம் நீங்கிய பிரம்மனுக்கு, “நீ இத்தலத்திலேயே இருந்து என்னை வழிபடுபவர்களின் தலையெழுத்தை மாற்றுவாயாக” என்று ஈசன் அருள்புரிந்தார்.
அதன்படி இங்கே கோவில் கொண்டுள்ள பிரம்மதேவன் பிரமாண்டமான வடிவத்தில் காட்சி கொடுக்கிறார். ஜாதக ரீதியாக வாழ்க்கையில் பிரச்சினை இருப்பவர்கள், செவ்வாய் தோஷம், திருமணம் கைகூடாமல் போவது போன்ற பிரச்சினைக்கு, அவரவர் ஜாதகத்தை இத்தல பிரம்மனின் சன்னிதியில் வைத்து வழிபாடு செய்தால், பிரச்சினைகள் விரைவில் நீங்கி நன்மை நடைபெறும் என்பது நம்பிக்கை.
வியாழக்கிழமை தோறும் இத்தல பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பிரம்மன், நவக்கிரகங்களில் குருவுக்கு அதி தேவதை என்பதால், குருவுக்கு உகந்த வியாழக்கிழமையில் இந்த அலங்காரம் செய்கிறார்கள். இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை நைவேத்தியமாக படைத்து, மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த பிரம்மனை வழிபடும் பக்தர்களுக்கு, மஞ்சள்தான் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. திருச்சியில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்திலும், சமயபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பட்டூர் திருத்தலம் இருக்கிறது.






