திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு

வயதான மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன ஒதுக்கீடுக்கான டிக்கெட் 23-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையானை ஜூலை மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், இதர தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை ஜூலை மாதம் வழிபட இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் சேவை டிக்கெட்டுகளின் லக்கி டிப் பதிவுக்கு இன்று காலை 10 மணியில் இருந்து 21-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். லக்கி டிப் மூலம் இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்களுக்கு 21 முதல் 23-ந்தேதி மதியம் 12 மணி வரை பணம் செலுத்தினால் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் 22-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். உற்சவ சேவைகளுக்கான ஜூலை மாத ஒதுக்கீடு தரிசன ஸ்லாட்டுகள் 22-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். 23-ந்தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். 23-ந் தேதி ஸ்ரீவாரி தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
வயதான மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன ஒதுக்கீடு 23-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம். சிறப்பு நுழைவு தரிசன டிக்கட்டுகள் (ரூ.300 கட்டணம்) 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். திருப்பதி, திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதி அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
எனவே பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளமான Https://ttdevasthanams.ap.gov.in தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நாளுக்கு திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.