சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா.. 25-ம் தேதி கொடியேற்றம்


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா.. 25-ம் தேதி கொடியேற்றம்
x

சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 2ஆம் தேதி நடக்கிறது.

கடலூர்

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மார்கழியில் ஆருத்ரா தரிசன விழா, ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனம் ஆகிய இருபெரும் தரிசன விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

அவ்வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வருகிற 25 ஆம் தேதி வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நடராஜர் சன்னதிக்கு முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில், வேத மந்திரங்கள் முழங்க, உற்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் காலை 7.31 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றி உற்சவத்தை துவக்கி வைக்கிறார்.

10 நாட்கள் நடைபெறும் விழாவில், வெள்ளிக்கிழமை (26ம் தேதி) சந்திரபிரபை வாகனத்தில் சாமி வீதியுலா நடக்கிறது. 27ம் தேதி தங்க சூரியபிரபை, 28ம் தேதி வெள்ளி பூத வாகனம், 28ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா, 29ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் (தெருவடைச்சான்) உற்சவம், 30ம் தேதி வெள்ளி யானை வாகனம், 31ம் தேதி தங்க கைலாச வாகனம், ஜனவரி 1- ஆம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர், வெட்டுக்குதிரையில் வீதி உலா நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜனவரி 2ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து நான்கு வீதிகள் வழியாக இழுத்து செல்வர். மறுநாள் 3ம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் 6:00 வரையில், சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, சொர்ணாபிஷேகம், சித்சபையில் ரகசிய பூஜையும் நடக்கிறது. பஞ்சமூர்த்தி வீதியுலாவை தொடர்ந்து, மதியம் 2:00 மணிக்கு மேல் 3:00 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன விழா நடக்கிறது. 4ம் தேதி, முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 5ம் தேதி இரவு, ஞானப்பிரகாசம் குளத்தில், தெப்ப உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story