ஆறுமுகநேரி சிவன் கோவில் திருவிழா: பச்சை சாத்தி சப்பரத்தில் மகாவிஷ்ணு ஸ்வரூபமாக எழுந்தருளிய நடராஜர்

சேர்க்கை அபிஷேகத்தை தொடர்ந்து வெட்டும் குதிரை வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா கடந்த 22ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி காலையிலும் மாலையிலும் சப்பரபவனியும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
நேற்று 8ம் திருநாள் காலையில் நடராஜர், அம்பாள், மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடராஜமூர்த்தி வெண்பட்டு உடுத்தி வெண்மலர்ச்சூடி வெள்ளை சாத்தி சப்பரத்தில் பிரம்ம ஸ்வரூபமாக திருவீதி உலா நடைபெற்றது.
இரவில் ஸ்ரீ நடராஜர் மகாவிஷ்ணு ஸ்வரூபமாக எழுந்தருளி பச்சை சாத்தி சப்பரத்தில் பவனி வந்தார். இதன் பின்னர் சேர்க்கை அபிஷேகத்தை தொடர்ந்து வெட்டும் குதிரை வாகனத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடந்தது. முன்னதாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர் கதிரேசன், பெரிய புராணத்தில் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும் நடந்தது.
நிகழ்ச்சிகளில் மண்டகபடிதாரர்களான தொழிலதிபர் எஸ்.ஆர்.எஸ். சுரேஷ், கல்யாண குமார், குமார் மற்றும் யாதவ சமுதாயத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
9வது நாளான இன்று காலையில் சுவாமி பிக்சாடனர் கோலத்தில் சப்பர திருவீதி உலாவும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் ஊழியர்கள் செய்திருந்தனர்.






