சாமிதோப்பு அய்யா கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது- நிகழ்ச்சிகள் விவரம்

சாமிதோப்பு அய்யா கோவிலில் அடுத்த மாதம் 1-ம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடக்கிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆவணித் திருவிழா இன்று (22.8.2025) வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும். 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு குரு பால் பையன் தலைமை தாங்கினார். குருமார்கள் பையன் காமராஜ், பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குரு பையன் ராஜா கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் பணிவிடையும், தர்மங்களும், வாகன பவனியும் நடைபெற்றது.
பள்ளியறை பணிவிடையை குருமார்கள் பையன் ஸ்ரீராம், பையன் சிவராஜ், பையன் பொன்ராஜ், ஸ்ரீராம பையன் ஆகியோர் செய்தனர். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. மாலையில் பணிவிடையும், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நாளை 23-ம் தேதி மாலையில் அய்யா மயில் வாகனத்தில் பவனி வருதல், 24-ம் தேதி இரவு அய்யா அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதல், 25-ம் தேதி அய்யா பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 26-ம் தேதி அய்யா பச்சைசாற்றி சப்பர வாகனத்தில் பவனி வருதல், 27-ம் தேதி அய்யா சர்ப்ப வாகனத்தில் பவனி வருதல் , 28-ம் தேதி அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
8-ம் திருவிழா நாளான 29-ம்தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு அய்யா குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வும், தொடர்ந்து அன்னதர்மமும் நடக்கிறது.
30-ம் தேதி அய்யா அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும், 31-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அய்யா இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளி பவனிவரும் நிகழ்சியும் நடக்கிறது
11-ம் திருவிழாவான செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திங்களன்று நண்பகல் 12 மணிக்கு அய்யா பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளியதும், தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனியும் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை பதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






