இறைவன் அளித்த அருட்கொடைகளை கொண்டு திருப்தி கொள்ளுங்கள்..!


இறைவன் அளித்த அருட்கொடைகளை கொண்டு திருப்தி கொள்ளுங்கள்..!
x

இறைவனின் நாட்டப்படியே தனக்கு சில அருட்கொடைகள் வழங்கப்படவில்லை என்பதை மனிதன் உணர்ந்தால் அவனிடம் மற்றவர்கள் குறித்த பொறாமை ஏற்படாது.

இறைவனின் படைப்பில் மனித இனம் ஏற்றத்தாழ்வு மிக்கதாகவே படைக்கப்பட்டுள்ளது. சிலர் அழகான தோற்றம், அனைத்து விதமான வாழ்க்கை வசதி வாய்ப்புகள் போன்றவற்றுடன் வாழ்கிறார்கள். அதே நேரத்தில் சிலர் மிகச்சாதாரண வாழ்க்கையுடன் அன்றாடம் போராட்டத்துடன் உள்ளனர்.

இதுபற்றி திருக்குர் ஆனில் பல இடங்களில் இறைவன் விளக்கிக் கூறுகின்றான்.

திருக்குர்ஆன் (29:62) கூறுகிறது: "அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்".

மற்றொரு வசனத்தில் (34:36) “நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

இத்தகைய ஏற்றத்தாழ்வு வாழ்வு நிலை மனிதர்களில் பலரை பொறாமை கொள்ளச் செய்துவிடுகிறது. ஒருவருக்கு சில அருட்கொடைகள் கொடுக்கப்பட்டு இருந்தால், அது இறைவனின் விருப்பப்படியே கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மனிதன் உணரத் தவறிவிடுகிறான். அவனுக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட சிறப்பான நிலை உள்ளது. எனக்கு ஏன் அந்த அருட்கொடைகள் கிடைக்கவில்லை என்று பொறாமை கொள்கிறான்.

பொறாமை என்பது மனித உணர்வுகளில் ஒன்று. தன்னிடம் இல்லாத ஒன்று, தான் விரும்பும் ஒன்று பிறரிடம் இருக்கும்போது அவனுக்குள் ஏற்படும் ஏக்கம், ஆசை பொறாமையாக மாறுகிறது. இந்த உணர்வு தோன்றுவது மனித இயல்பு என்றாலும், இறைவனின் நாட்டப்படியே தனக்கு சில அருட்கொடைகள் வழங்கப்படவில்லை என்பதை மனிதன் உணருவதில்லை. இதை உணர்ந்தால் அவனிடம் மற்றவர்கள் குறித்த பொறாமை ஏற்படாது.

ஆனால் சராசரி உணர்வுமிக்க மனிதன் பொறாமை கொண்டு தனது வாழ்வையும் அழிவை நோக்கியே நகர்த்துகின்றான்.

நபி (ஸல்) கூறினார்கள்: “பகைமை கொள்ளாதீர்கள், பொறாமை கொள்ளாதீர்கள், புறக்கணிக்காதீர்கள், சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிடவேண்டாம்”. (நூல்: புகாரி)

மற்றொரு நபி மொழியில், “பொறாமை கொள்ளாது இருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்றுவிடும்" என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார். (நூல்: அபூதாவூத்)

மனிதன் உயர்ந்த நிலையில் இருப்பவருடன் தன்னை ஒப்பிடாமல் தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவருடன் தன்னை ஒப்பிட வேண்டும் என்று நபிகளார் இவ்வாறு கூறுகின்றார்.

"வாழ்க்கைத் தரத்தில் உங்களுக்குக் கீழ் இருப்போரைப் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்" (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்).

வியாபாரத்தில் பொறாமை கொண்டு விலையை உயர்த்தக்கூடாது என்றும், சக முஸ்லிமை சகோதரனாக கருதி உதவிட வேண்டும் என்றும் நபிகளார் மனித சமுதாயத்திற்கு இவ்வாறு பாடம் புகட்டுகின்றார்.

“ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்! நீங்கள் பொருளை வாங்கும் எண்ணமில்லாமல் பிறரை வாங்கச் செய்வதற்காக விலையை உயர்த்தி விடாதீர்கள்! ஒருவருக்கொருவர் பகைமை கொள்ளாதீர்கள்! ஒருவருக்கொருவர் முகம் திருப்பிக் கொள்ளாதீர்கள்! இன்னும், ஒருவரின் வியாபாரத்தில் மற்றவர் (இடையே புகுந்து) வியாபாரம் செய்யாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களாகவும் (உங்களுக்குள்) சகோதரர்களாகவும் இருங்கள்! ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்கு சகோதரனாய் இருக்கிறான்; அவன், அவனுக்கு அநீதி இழைக்கமாட்டான். அவன் அவனை ஏமாற்றமாட்டான், அவன் அவனை இழிவுபடுத்தவும் மாட்டான்".

இறையச்சம் இங்கே இருக்கிறது என (கூறி) தம் நெஞ்சை மும்முறை சுட்டிக் காண்பித்து, "மனிதன் தன் சகோதரனை இழிவாகக் கருதுவதே பெரும் தீங்கிற்குப் போதுமானதாகும். முஸ்லிமின் ரத்தமும், அவனுடைய சொத்தும், மேலும் அவனுடைய தன்மானமும் மற்றொரு முஸ்லிம் மீது ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” (அறிவிப் பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

இறைவனின் அருட்கொடைகள் வழங்கப்பட்டவர்கள் அதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். சொத்துக்களாலும், பணத்தாலும் எதையும் வாங்க முடியாது. நற்குணங்கள், மலர்ந்த முகத்துடன் பிறருக்கு வழங்குவது போன்றவற்றால் மட்டுமே பிறரின் அன்பை பெறமுடியும் என்று நபிகளார் இவ்வாறு கூறுகிறார்.

"நீங்கள் உங்கள் சொத்துக்களால் மக்களைக் கவர முடியாது. மாறாக, உங்களின் மலர்ந்த முகம் மற்றும் நற் குணத்தால்தான் (அவர்களைக்) கவர முடியும்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

எனவே, இறைவனின் நல்லடியார்களே, உங்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட அருட்கொடைகளைக் கொண்டு திருப்தி கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையானவற்றை இறைவனிடம் கேளுங்கள். நல்லடியார்களின் கோரிக்கைகளை ஏற்கும் விசால மனம் படைத்தவன் அல்லாஹ். அடியார்களின் கரங்களை வெறுமையாக அனுப்ப மனம் இல்லாதவன்.

இறைவனின் படைப்பில் பொறாமை வேண்டாம். நற்குணங்களால் உங்களை நிரப்புங்கள். இறையருள் உங்களை நாடி வரும்.

-எம்.கே.எம்.தீன், நெல்லை.

1 More update

Next Story