கொளஞ்சியப்பர் கோவிலில் புதிய கோபுரங்கள் அமைக்க பூமி பூஜை

பூமி பூஜை விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசும்போது, அடுத்த ஆண்டு தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன. மேலும், கோவிலின் தெற்கு மற்றும் மேற்கு ராஜகோபுரங்கள் புதியதாக அமைக்கப்படுகின்றன. இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு ராஜகோபுர பணிக்கு அடிக்கல் நாட்டினர். தருமை ஆதினம் கட்டளை சுவாமிகள் சொக்கலிங்க தம்புரான் சுவாமிகள், எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசும்போது, அடுத்த ஆண்டு (2026) தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும், அதற்கான பணிகளை வேகமாக சிறப்பாக முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கொளஞ்சியப்பர் கோவிலில் மூலவர் வைத்தியராகவும் நீதிபதியாகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பக்தர்கள் தங்களது குறைகள் கோரிக்கைகள் நிவர்த்தியாக வேண்டி இந்த கோவிலில் உள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் நிறைவேறும் என்பது ஐதீகம்.