கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சிறப்பு யாகம் மற்றும் உற்சவருக்கு அலங்காரத்தைத் தொடர்ந்து வாகன உற்சவம் நடந்தது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் 39-ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்னபக்ஷி வாகனம், சிம்ம வாகனம், ஆஞ்சநேயர் வாகனம் மற்றும் சேஷ வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் நரசிம்மர் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7-ந் தேதி திருக்கல்யாணமும், இரவு கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனத்திலும் நரசிம்மர் வலம் வந்தார்.
இன்று காலை சாமிக்கு அபிஷேகம், மங்களாரத்தி, பிரகார உற்சவம் ஆகியவை நடைபெற்றன. 9 மணிக்கு, சிறப்பு யாகமும், உற்சவருக்கு அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து வாகன உற்சவம் நடந்தது. இந்த உற்சவம் சின்ன ஏரிக்கரை, நேதாஜி சாலை, மீன் மார்க்கெட், காந்தி சிலை வழியாக கோவிலை வந்தடைந்தது.
நாளை (வியாழக்கிழமை) புஷ்ப பல்லக்கு சேவை, 13-ந் தேதி சயன உற்சவம், 14-ந் தேதி சுப்ரபாத சேவை நடைபெறும். 15-ந் தேதி காலை 108 சங்காபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், மாலை, ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.