மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் மீதான திருஷ்டி நீங்க சாமுண்டி மலையில் தேரோட்டம்


மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் மீதான திருஷ்டி நீங்க சாமுண்டி மலையில் தேரோட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2025 2:41 PM IST (Updated: 6 Oct 2025 3:24 PM IST)
t-max-icont-min-icon

மைசூர் சாமுண்டி மலையில் நடைபெற்ற தேரோட்டத்தை 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கண்டுகளித்தனர்.

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா விமரிசையாக நடந்து முடிந்தது. தசரா விழாவை உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கண்டு களித்திருக்கிறார்கள். மைசூர் நகரத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்திருக்கிறார்கள்.

ஜம்பு சவாரியின்போது சாமுண்டீஸ்வரி அம்மன் மீது திருஷ்டி விழுந்திருப்பதாக ஐதீகம். இந்த திருஷ்டியை நீக்குவதற்காக தசரா விழா முடிந்த மூன்றாவது அல்லது ஐந்தாவது நாட்களில் சுப லக்கின சுபமுகூர்த்தத்தில் தேரோட்டம் நடத்துவது வழக்கம். அவ்வகையில் மைசூர் சாமுண்டி மலையில் இன்று காலை சாமுண்டீஸ்வரி தேரோட்டம் நடந்தது.

மைசூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த மன்னர் யதுவீர் உடையார் குடும்பத்தினர் மற்றும் சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ. ஜி.டி. தேவேகவுடா குடும்பத்துடன் கலந்துகொண்டு தேரோட்டத்தை துவக்கி வைத்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சாமுண்டீஸ்வரியை வழிபட்டனர். தேர் கோவிலை சுற்றி வலம் வந்து நிலைபெற்றது.

தேரோட்டத்திற்கு முன்பு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு கோவில் அர்ச்சகர்கள் விசேஷ திரவியங்களால் அபிஷேகம் செய்து, பட்டு சேலை, தங்க ஆபரணங்கள் அணிவித்து, பலவிதமான மலர்களால் அலங்காரம் செய்து பல்லக்கில் சுமந்து வந்து, தேரில் எழுந்தருளச் செய்தனர்.

தேரோட்டத்தை கண்டுகளிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே சாமுண்டி மலைக்கு வந்திருந்தனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தேரோட்டத்தை கண்டுகளித்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு சாமுண்டி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது, பக்தர்களின் வசதிக்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டது.

தேரோட்ட நிகழ்வின்போது படிக்கட்டுகள் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி படிக்கட்டுகளுக்கு மஞ்சள், குங்குமம் தடவி, கற்பூரம் ஏற்றி வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

1 More update

Next Story