பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி தேர் பவனி கோலாகலம்

விழாவின் நிறைவு நாளான இன்று அன்னை வேளாங்கண்ணி மாதாவின் பிறந்த நாள் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 53-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நலம்பெறும் விழா, பக்த சபை விழா, நற்கருணைப் பெருவிழா, தேவ அழைத்தல் விழா, உழைப்பாளர் விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழா, இளைஞர் விழா, ஆசிரியர்கள் விழா, குடும்ப விழா, அன்பிய பெருவிழா என்று ஒவ்வொரு நாளும் திருப்பலி நிகழ்வுகளுடன் விழா கோலாகலமாக நடைபெற்று வந்தது.
விழாவில் நேற்று மாலை தேர்திருவிழா நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் அன்னை வேளாங்கண்ணி தேர் பவனி நடந்தது. இதை சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தொடங்கி வைத்தார்.
பக்தர்கள் வெள்ளத்தில் அன்னை வேளாங்கண்ணி தேர் பவனி தவழ்ந்து வந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் நடுவில் மாதாவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கை செலுத்தி பிரார்த்தனை செய்தனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
விழாவின் நிறைவு நாளான இன்று (திங்கட்கிழமை) அன்னை வேளாங்கண்ணி மாதாவின் பிறந்த நாள் பெருவிழா கொண்டாடப்படுகிறது. அதிகாலை முதல் திருப்பலிகள் நடைபெறுகின்றன. அன்னை வேளாங்கண்ணி முடிசூட்டு விழா நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு செபமாலை, நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கப்படுகிறது. அத்துடன் 11 நாட்களாக நடைபெற்ற விழா நிறைவு பெறுகிறது.






